×

கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்தப்பட்ட கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை: முதல் நபராக விமானம், கப்பலை அனுப்பியது

புதுடெல்லி: அரபிக்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை மீட்க முதல் நபராக இந்திய கடற்படை விமானத்தையும், கண்காணிப்பு கப்பலையும் அனுப்பி உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அரபிக்கடலில் மால்டா நாட்டு கொடியுடன் பயணித்த தனியார் வணிக கப்பல் எம்வி ரூயனில் 6 கடற்கொள்ளையர்கள் புகுந்ததாக இந்திய கடற்படைக்கு கடந்த வியாழக்கிழமை அவசர தகவல் வந்தது. உடனடியாக அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்து நடவடிக்கை எடுத்தது.

அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை விமானத்தை சம்பவ இடத்திற்கு திரும்பி விடப்பட்டது. இந்த விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறக்கத் தொடங்கியது. அதோடு, ஏமன் வளைகுடாவில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு ரோந்துக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சனிக்கிழமை ரூயன் கப்பலை நெருங்கியது. கடத்தப்பட்ட கப்பலில் 18 மாலுமிகள் சிக்கி உள்ளனர். இவர்களில் இந்தியர்கள் யாருமில்லை. இக்கப்பலை 6 கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ள சோமாலியா நாட்டின் துறைமுகத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

இந்தியா, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கடற்கொள்ளை தடுப்பு படைகள் கடத்தப்பட்ட கப்பலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இது குறித்து இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘கடத்தப்பட்ட கப்பலுக்கு முதல் நபராக இந்திய கடற்படை உதவி உள்ளது. சர்வதேச கூட்டாளிகளுடனும், நட்பு நாடுகளுடனும் இணைந்து வணிகக் கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார். கடைசிகட்ட தகவலின்படி, கப்பலின் உள்ளே கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post கடற்கொள்ளையர்களால் அரபிக்கடலில் கடத்தப்பட்ட கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை: முதல் நபராக விமானம், கப்பலை அனுப்பியது appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,Arabian Sea ,New Delhi ,Dinakaran ,
× RELATED அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!!