×

காலைக்கடன் கழிக்க சென்றபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி பரிதாப சாவு: சோழவரம் அருகே சோகம்

புழல்: சோழவரம் அருகே இன்று காலை விவசாய நிலத்தில் காலைக்கடன் கழிக்க சென்ற அண்ணன், தம்பி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோழவரம் அருகே ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கன்னியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு மனைவி மற்றும் விஷ்வா (12), சூர்யா (10) என்ற 2 மகன்கள் உள்னளர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் விஷ்வா 8ம் வகுப்பும், சூர்யா 6ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில், கன்னியம்மன்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இன்று காலை விஷ்வாவும் சூர்யாவும் காலைக்கடன் கழிக்க சென்றனர். அங்குள்ள மோட்டாரில் ஏற்கனவே மின்கசிவு ஏற்பட்டிருந்தது. அவ்வழியாக நடந்து சென்றபோது, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். வெகு நேரமாக இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். மேலும் அக்கம் பக்கத்தினரும் சென்றனர். அப்போதுதான் இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிந்தது. இருவரது உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவலறிந்து சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்மோட்டாரில் ஏற்கனவே மின்கசிவு ஏற்பட்டிருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பும் சோகமும் நிலவியது.

The post காலைக்கடன் கழிக்க சென்றபோது மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி பரிதாப சாவு: சோழவரம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Puzhal ,
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு