×

சபரிமலையில் பக்தர்கள் விரைவில் தரிசனம்: இன்று 90 ஆயிரம் பேர் முன்பதிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் முன்னேற்பாடுகள் காரணமாக 18ம் படியில் ஒருமணி நேரத்தில் 4,600 பக்தர்கள் ஏறுவதால் சபரிமலையில் காத்திருக்காமல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து வருகின்றனர். இன்று 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல சீசனில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

ஆனால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வந்ததுதான் நெரிசல் ஏற்பட காரணம் என்றும், சபரிமலையில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறினர். கடைசியில் கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டதால்தான் பக்தர்களுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அனுபவமில்லாத போலீசார் மாற்றப்பட்டு சபரிமலையில் ஏற்கனவே பணிபுரிந்த போலீசார் பணியில் நியமிக்கப்பட்டனர். தரிசன நேரம் 17 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உட்பட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு நேரடியாக சென்று ஏற்பாடுகளை கவனித்தார். இதன் காரணமாக கடந்த இரு தினங்களாக பக்தர்களின் அவதி குறைந்தது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தமிழக பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேரள முதல்வரிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். தினசரி முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரமாக குறைக்கப்பட்ட போதிலும் இவர்கள் அனைவரும் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தவர்கள் ஆவர். இதனால் இன்று அதிகாலை முதலே சன்னிதானத்தில் நீண்ட வரிசை காணப்படுகிறது. கூடுதல் நெரிசல் ஏற்படாமல் இருக்க பம்பை முதல் போலீசார் பக்தர்களை பல்வேறு பகுதிகளில் தடுத்து நிறுத்தி கட்டம் கட்டமாக அனுப்பி வைத்து வருகின்றனர். நேற்று இரவு வரை சபரிமலையில் 18.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

The post சபரிமலையில் பக்தர்கள் விரைவில் தரிசனம்: இன்று 90 ஆயிரம் பேர் முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,
× RELATED ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு