×

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் தகவல்


சென்னை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (டிச.16, 17) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் மழையால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளை கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், மோட்டார் பம்புகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைக்கவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அந்தந்த வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Districts ,Chennai ,Indian Meteorological Centre ,IMC ,Delta ,Southern districts ,Weather ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 5 நாட்களுக்கு...