×

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி தொடங்கியது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

 

மதுராந்தகம்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் ஊராட்சியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் சர்க்கரை உற்பத்தி செய்ய ஆண்டுதோறும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு கரையோரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓங்கூர் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஆண்டுதோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் விளைவிக்கின்றனர்.

பின்னர் அரவைக்காக, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து, ஆலை நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் கரும்புகளை வெட்டி டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். இதேபோன்று, இந்த ஆண்டும் அந்த பகுதியில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த கரும்பு, வெட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளதால் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக 2023 – 2024ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சர்க்கரை ஆலை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கரும்பு கட்டுகளை அரவை இயந்திரத்தில் போட்டு சர்க்கரை உற்பத்தியை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ஜவகர் பிரசாத் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் சத்யசாய், கரும்பு விவசாயிகள், ஆலை அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி தொடங்கியது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Cooperative Sugar ,Mill ,Minister ,Thamo Anparasan ,Madhurandakam ,Maduraandakam Cooperative Sugar Factory ,Chengalpattu District, Patalam ,Madhuranthakam Cooperative Sugar Factory ,
× RELATED காகித ஆலை தொமுச நிர்வாகிகள் தேர்தல்