×

அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை எடுத்த விவகாரம் விசாரணை நிலை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு வானகரத்தில் நடந்தது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் அங்கு மோதல் எழுந்ததாகவும், மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டதாகவும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், அதிமுக தலைமை அலுவலத்தில் சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எடுத்து சென்று விட்டனர். இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகம் கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்தாண்டு தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றார். அதற்கு சிபிசிஐடி தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் முன்ஜாமீன் வாங்கி உள்ளனர். 116 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை சரியான கோணத்தில் நடந்து வருகிறது. வழக்குகள் குறித்த விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே தனது நேரத்தை வீணடித்துள்ளது. காவல்துறை தனது பணியை செய்யட்டும். இந்த வழக்கின் நிலை குறித்த அறிக்கையை நான்கு வாரத்திற்குள் சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை எடுத்த விவகாரம் விசாரணை நிலை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,AIADMK ,HC ,Chennai ,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...