×

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன் குவிப்பு

பெர்த்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பாக். வேகம் ஆமிர் ஜமால் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பெர்த் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்திருந்தது (84 ஓவர்). தொடக்க வீரர் வார்னர் 164 ரன் விளாசினார். மிட்செல் மார்ஷ் 15, அலெக்ஸ் கேரி 14 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்தனர்.

கேரி 34 ரன், ஸ்டார்க் 12 ரன்னில் ஆட்டமிழக்க, மார்ஷ் 90 ரன் (107 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார். கம்மின்ஸ் 9, லயன் 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஆஸி. முதல் இன்னிங்சில் 487 ரன் குவித்து (113.2 ஓவர்) ஆல் அவுட்டானது. ஹேசல்வுட் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாக். தரப்பில் அறிமுக வேகங்கள் ஆமிர் ஜமால் 6 விக்கெட், குர்ரம் ஷாசத் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஷாகீன் ஷா அப்ரிடி, ஃபாகிம் அஷ்ரப் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்துள்ளது (53 ஓவர்). அப்துல்லா ஷபிக் 42 ரன், கேப்டன் ஷான் மசூத் 30 ரன்னில் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் 38 ரன், குர்ரம் ஷாசத் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். பாக். கைவசம் 8 விக்கெட் இருக்க, முதல் இன்னிங்சில் இன்னும் 355 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது. இரு அணிகளுமே முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் முனைப்புடன் உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 487 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Australia ,Perth ,Pakistan ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...