×

14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் போராட்டம் : இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

டெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்களவையில் கலர் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 14 எம்பிக்கள் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அவைக்கு வெளியே இருந்து தொடர் கோஷம் எழுப்பினார்கள்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் தொடங்கியதும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி எம்பிக்கள் முழக்கமிட்டனர். 14 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் எம்பிக்கள் வலியுறுத்தினர்.காகிதங்களை ஏந்தி சபாநாயகர் இருக்கையை எம்பிக்கள் முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை, மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி முழக்கமிட்ட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post 14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் போராட்டம் : இரு அவைகளும் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்