×

கலர் குண்டு தாக்குதல் கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி 4 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், அமித் ஷா பதவி விலகக் கோரி கோஷம், அவைகளும் முடங்கின

புதுடெல்லி: மக்களவையில் கலர் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. இதையடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக எம்பி பார்த்திபன் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதால் பின்னர் நீக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தாக்குதலின் 22வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நாளில் மக்களவையில் எம்பிக்கள் இருந்த அவையில் குதித்த அவர்கள் மறைத்து வைத்திருந்த வண்ண குண்டுகளை வெடிக்க செய்தனர். அவர்களை எம்பிக்கள் மடக்கி பிடித்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியில் பெண் உள்பட 2 பேர் ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘பாரத் மாதா கீ ஜெய்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். அவர்களும் கலர்குண்டுகளை வெடிக்க செய்தனர். மக்களவையில் அத்துமீறி நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் வெளியில் இருந்து முழக்கமிட்ட அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரில் ஒருவர் குருகிராமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ந்த சம்பவம் தொடர்பாக 2 அவைகளிலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விதி எண் 267ன் கீழ் நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையிலும், நசீர் உசைன், ஜெபி மாதர் ஆகியோர் மாநிலங்களவையிலும் நோட்டீஸ் வழங்கினர். நேற்று காலை அவை தொடங்கியதும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்து பேசினார்.

இதனை ஏற்று கொள்ளாத எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையை முழுவதும் ஒத்திவைத்து விட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து முழக்கமிட்டனர். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லா நிராகரித்தார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் மக்களவை பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க கேட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி,’ நாடாளுமன்றத்தின் உள் பாதுகாப்பு சபாநாயகரின் வரம்பிற்கு உட்பட்டது’ என்றார். அவரது பேச்சை கேட்காத எம்பிக்கள் அவையில் மையப்பகுதியில் திரண்டு தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள். இதை தொடர்ந்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கடும் கூச்சலுக்கு இடையே தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில்,’ இந்த அவை மற்றும் சபாநாயகரின் அதிகாரத்தை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்ட எம்பிக்கள் டி.என் பிரதாபன், ஹிபி ஈடன், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ் ஆகியோரை அவை நடவடிக்கைகளில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அந்த தீர்மானம் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு இடையே நிறைவேறியது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியதும் அமளி நிலவியதால், வி.கே.ஸ்ரீகண்டன் (காங்.), பென்னி பெஹனன் (காங்.), முகமது ஜாவேத் (காங்.), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்), கனிமொழி (தி.மு.க.), கே.சுப்பராயன் (இ.கம்யூனிஸ்ட் ), எஸ்ஆர் பார்த்திபன் (திமுக), எஸ் வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்), மாணிக்கம் தாகூர் (காங்) ஆகிய 9 எம்பிக்களையும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அவையில் வரலாறு காணாத அமளி நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அவைக்கு வெளியே இருந்து தொடர் கோஷம் எழுப்பினார்கள். திமுக எம்.பி எஸ்ஆர் பார்த்திபன் மக்களவைக்கே நேற்று வரவில்லை. ஆனால், தவறுதலாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தெரிந்ததும் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது. நாள் முழுவதும் முடங்கியது மாநிலங்களவை: மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், மக்களவைக்குள் நடந்த கலர் குண்டு தாக்குதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த 28 நோட்டீஸ்களை ஏற்க முடியாது என்று அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் மையப்பகுதிக்கு வந்து இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இது விதிகளை மீறிய செயல் என்று ஜெகதீப் தன்கர் எச்சரித்தார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், அவைத்தலைவர் இருக்கையை நோக்கி சென்று கைகளை அசைத்து சைகை செய்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவைத்தலைவர் தன்கர்,’ இதுபோன்ற கடுமையான, தவறான நடத்தையை அனுமதிக்க முடியாது. டெரிக் ஓ பிரையனை அவையில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவர் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றார்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் கொண்டு வந்த தீர்மானம் பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது டெரிக் ஓ பிரையனும் அவையில் இருந்தார். அவரை அவையை விட்டு வெளியேறும்படி ஜெகதீப் தன்கர் எச்சரித்தார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பால் அடுத்தடுத்து 5 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது ​​தன்கர், ‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தனது நடத்தையைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

மேலும் அவர் சபையில் இருந்து வெளியேற மேலும் ஒரு வாய்ப்பு வழங்குகிறேன். இதுபோன்ற நடவடிக்கை இந்த அவையின் உறுப்பினருக்கு தகுதியற்றது. இதனால் அவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க எனது அறையில் என்னுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கார்கே தனது விருப்பமின்மையைத் தெரிவித்திருக்கிறார் என்பதை நான் சபைக்கு சுட்டிக்காட்டுகிறேன். இது எனக்கு வேதனையான விஷயம். ஆரோக்கியமான நாடாளுமன்ற நடைமுறைக்கு இசைவாக இல்லை. நான் இன்னும் அவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையனைக் காண்கிறேன். இது அவை உத்தரவுகளை மீறிய செயல். இதுபற்றி அவை முன்னர் பியூஷ் கோயலுடன் எனது அறையில் கார்கே சந்தித்து பேச வேண்டும்.

அதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. எதிர்க்கட்சித் தலைவரும், அவை முன்னவரும் உடனடியாக எனது அறையில் என்னுடன் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்றார். ஆனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் நாள் முழுவதும் அவையை ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்து உத்தரவிட்டார். நாடாளுமன்ற பாதுகாப்பு பிரச்னையில் வரலாறு காணாத அமளி காரணமாக நேற்று மட்டும் மக்களவையில் 14 எம்பிக்களும், மாநிலங்களவையில் ஒரு எம்பியும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* எதிர்க்கட்சிகள் கண்டனம்
நாடாளுமன்றத்தில் நேற்று ஒரே நாளில் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு: ரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டோலா சென்: உள்துறை அமைச்சர் அவையில் அறிக்கை அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இந்தப் பிரச்னையை எழுப்புவது எதிர்க்கட்சியாக இருக்கும் எங்கள் உரிமை. காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி: எம்பிக்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்ற பாதுகாப்பு பிரச்னையில் எம்.பி.க்கள் குரல் எழுப்பாவிட்டால் என்ன பலன்?  இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம்: எம்பிக்கள் சஸ்பெண்ட் அவசியமற்றது, ஜனநாயகமற்றது.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. பாஜ எம்பி ஏன் பாஸ் கொடுத்தார்? பாஜ எம்பி மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?. பாஜ எம்பி பாதுகாக்கப்பட்டுள்ளார். இந்த அரசியல் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பிய எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். தேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

இ.கம்யூனிஸ்ட் எம்பி சந்தோஷ் குமார்: எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நாங்கள் ஏற்கப் போவதில்லை. இது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. பாஸ் கொடுத்த குற்றவாளியான எம்.பி. இன்னும் மக்களவையில் இருக்கிறார். இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டம் நடத்துபவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதான் நகைமுரண்.

* நாடாளுமன்ற பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு: சபாநாயகர்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கைகேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட போது சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது: முழு நாடாளுமன்ற செயலகமும் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. குறிப்பாக மக்களவைக்கு உட்பட்டது. இது எங்கள் அதிகார வரம்பு. மக்களவை சபாநாயகர் என்ற முறையில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எனது பொறுப்பு.

நான் அமர்ந்து உங்களுடன் விவாதிப்பேன். மக்களவை செயலகத்தின் செயல்பாட்டில் அரசு ஒருபோதும் தலையிட முடியாது. நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். துகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,’ அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சம்பவத்தைக் கண்டிக்க வேண்டும். அவையில் போராட்டம் நடத்துவதில் அர்த்தமில்லை என்றார்.

* ஜனநாயக படுகொலை காங்கிரஸ் கண்டனம்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘நாடாளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதற்காக 14 எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை. அவர்கள் செய்த குற்றம் என்ன? ஒன்றிய உள்துறை அமைச்சரை அவையில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்துவது குற்றமா? ஆபத்தான பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த விரும்புவது குற்றமா?

தற்போதைய ஆட்சியின் அடையாளமான சர்வாதிகாரத்தின் கொடூரமான சாயல்கள் இதன் மூலம் தெரியவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினார். ங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில்,’ மக்களவையில் இல்லாத, டெல்லிக்கு வெளியே இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு எம்.பி., அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவையில் நுழைய ஊடுருவல்காரர்களுக்கு உதவிய பாஜ எம்.பி மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை’ என்றார்.

* மக்களவை பாதுகாப்பு மீறலை அரசியலாக்க வேண்டாம்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் பேசியதாவது: 1974 ஏப்ரல் 11 அன்று, நாடாளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்து ஒருவர் இரண்டு கைத்துப்பாக்கிகள், வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் மற்றும் சில துண்டு பிரசுரங்களை எடுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினார். 1974 ஜூலை 26 அன்று, பார்வையாளர்கள் கேலரியில் நுழைய முயன்ற ஒரு நபர் பிடிபட்டார். 974 நவம்பர் 26ல், பார்வையாளர்கள் கேலரிக்கு ஒரு நபர் வெடிபொருள் எடுத்துச் சென்றார். 1999 ஜனவரி 9 மற்றும் 10ல் இரண்டு பேர் பொது கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்தனர்.

கடந்த காலங்களிலும் சபாநாயகரின் வழிகாட்டுதலின்படி இதுபோன்ற அனைத்து விஷயங்களும் கையாளப்பட்டன என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உள்துறை செயலாளருக்கு சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார். விசாரணை தொடங்கப்பட்டு விட்டது. எல்லாப் பிரச்சினைகளையும் அரசியலாக்குவது சில உறுப்பினர்களின் வழக்கமாகிவிட்டது. இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சபாநாயகரும், அரசும் இந்த விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாள்கின்றனர். அவை நடவடிக்கைகள் முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* நாடாளுமன்ற பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு: சபாநாயகர்
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கைகேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட போது சபாநாயகர் ஓம்பிர்லா கூறியதாவது: முழு நாடாளுமன்ற செயலகமும் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. குறிப்பாக மக்களவைக்கு உட்பட்டது. இது எங்கள் அதிகார வரம்பு. மக்களவை சபாநாயகர் என்ற முறையில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எனது பொறுப்பு. நான் அமர்ந்து உங்களுடன் விவாதிப்பேன்.

மக்களவை செயலகத்தின் செயல்பாட்டில் அரசு ஒருபோதும் தலையிட முடியாது. நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். துகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,’ அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சம்பவத்தைக் கண்டிக்க வேண்டும். அவையில் போராட்டம் நடத்துவதில் அர்த்தமில்லை என்றார்.

* பா.ஜ எம்பி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மக்களவைக்குள் கலர் குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் பாஜ எம்.பி பிரதாப் சிம்ஹா வழங்கிய பாஸ் வழியாக உள்ளே நுழைந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்களவையில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி தொடர்பான விசாரணையில் அனைத்து விவரங்களும் வெளிவரும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,’இதுபோன்ற பாஸ்கள் எம்.பி.க்களால் நல்லெண்ணத்தில் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் பா.ஜ எம்பி மீது நடவடிக்கை என்பது விசாரணை மூலம் அனைத்தையும் வெளியே கொண்டு வரும். அதற்கு முன் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறார்கள். சபாநாயகர் ஓம் பிர்லா தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்’ என்றார்.

* சபாநாயகர் இருக்கை நோக்கி ஏற முயன்ற எம்பி
ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி எம்பி ஹனுமான் பெனிவால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடிய போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவைக்கு வரும்படி கோஷம் எழுப்பியபடி பல அடி உயரமுள்ள சபாநாயகர் இருக்கையை நோக்கி ஏற முயன்றார். அப்போது அவைக்கு தலைமை தாங்கிய பி மஹ்தாப் சபையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்ததால் இந்த பரபரப்பு அடங்கியது.

* அவைக்கு வராதவர் மீது நடவடிக்கை ஸ்.ஆர்.பார்த்திபன் சஸ்பெண்ட் ரத்து
நேற்று மக்களவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் இருந்த திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனை சஸ்பெண்ட் செய்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியானதும் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து,’ திமுக எம்பி பார்த்திபன் மீது தவறாக சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட ஓம்பிர்லா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் எஸ்ஆர் பார்த்திபன் பெயர் நீக்கப்பட்டு 13 எம்பிக்கள் பெயர் மட்டும் இடம் பெற்று இருந்தது.

The post கலர் குண்டு தாக்குதல் கண்டித்து நாடாளுமன்றத்தில் அமளி 4 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், அமித் ஷா பதவி விலகக் கோரி கோஷம், அவைகளும் முடங்கின appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Amit Shah ,NEW DELHI ,BOMBED ,LAKAWA ,Kolor ,Parliament ,Dinakaran ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்...