×

திருவண்ணாமலையில் தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிராயசித்த பூஜை நடத்தப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 26ம்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அன்று மாலை 2,668 உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து 40லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகாதீபத்தை தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் பிரகாசித்தது. 11 நாட்களும் ஏராளமான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்றும், கீழிருந்தும் தரிசனம் செய்தனர். இந்நிலையில் மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படுவது வழக்கம். அப்போது மலை உச்சியில் அண்ணாமலையார் திருப்பாதத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான பிராயசித்த பூஜை இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் கலசங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் கலசத்தை மலை உச்சிக்கு கொண்டு சென்று பிராயசித்த பூஜை நடந்தது. அண்ணாமலையார் பாதத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் மலை உச்சியின் மீது சிவாச்சாரியார்கள் புனித நீரை தெளித்தனர்.

The post திருவண்ணாமலையில் தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை appeared first on Dinakaran.

Tags : Maha Deepam ,Tiruvannamalai ,Annamalaiyar ,Karthikai Deepam ,Deepam ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான...