×

புயல் வெள்ளத்தால் நகரம் முழுக்க குவிந்தது சென்னையில் ஒரு வாரத்தில் 57,192 டன் குப்பை அகற்றம்

சென்னை, டிச.14: புயல் வெள்ளத்தால் சென்னை மாநகர் முழுவதும் குப்பை குவியல் குவியலாக குவிந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 57192.63 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த 4ம் தேதி புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகரில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வேளச்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, முகலிவாக்கம், கொரட்டூர், போரூர், வளசரவாக்கம், ஆலப்பாக்கம், மாதவரம், மாத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, மணலி, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி, கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில் வெள்ள நீர் வடிந்த நிலையில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் வீட்டு உபயோக பொருட்களான சோபா, கட்டில், மெத்தை, டிவி போன்ற பல பொருட்கள் வீணானது. குப்பை ஒவ்வொரு பகுதியிலும் மலை போல் குவிந்துள்ளன. அனைத்து தெருக்களிலும் குப்பையை அப்பகுதி மக்கள் கொட்டி உள்ளனர். இதனால் நகரமே குப்பை குவியலாக காட்சி அளித்தது. மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயலுக்குப் பின் டிசம்பர் 6ம் தேதி 5915.65 டன், 7ம் தேதி 6465.57 டன், 8ம் தேதி 7705.82 டன், 9ம் தேதி 8476.23 டன், 10ம் தேதி 8948.45. டன், 11ம் தேதி 9215.94 டன், 12ம் தேதி 10464.97 டன் என மொத்தம் 57192.63 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் வழக்கமாக சேகரிக்கப்படும் குப்பை 50638.74 டன், தோட்டத்து குப்பை 6553.89 டன். இந்த குப்பை கழிவுகள் அனைத்தும் 20 கனரக வாகனங்கள் மற்றும் 12 டிப்பர் லாரிகள் மூலம் சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி கழிவுப்பொருள் கையாளும் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

புயல் வெள்ளத்திற்கு பிறகு குப்பை மற்றும் கழிவு பொருட்களின் தேக்க விகிதம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக, தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.கே. நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. தண்டையார்பேட்டை மண்டலத்தை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 450 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது புயல் பாதிப்பால் ஒரு நாளைக்கு தலா 800 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படி, கடந்த 10 நாட்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் மட்டும் தனியார் லாரிகள் 30, மாநகராட்சி லாரிகள் 18 என மொத்தம் 48 லாரிகள், தனியார் பொக்லைன், 13 மாநகராட்சி பொக்லைன் 9 என மொத்தம் 22, மேலும் 435 பேட்டரி ஆட்டோக்கள் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் கொட்டிய குப்பை கழிவுகள், பெட், தலையணை, பாய், துணி, மரச்சாமான்கள் என 5834 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் கிடங்கில் தினமும் 4937 டன் குப்பை
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொட்டப்படும் குப்பையின் அளவு, லாரிகள் எவ்வளவு என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை முழுவதும் ஒரு நாளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு 718 லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், தினமும் 4937 மெட்ரிக் டன் குப்பை கொட்டப்படுகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெருக்களில் 1846 தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்’’ என்றார்.

கணக்கெடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
புயல் பாதிப்பால் சென்னையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாதிப்புகளை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் ஈடுபட்டனர். மேலும் குப்பையை அகற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பாதிப்புகள் எவ்வளவு என்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் முதலில் மாநகராட்சி ஊழியர்களைதான் அந்த பணியை செய்ய பயன்படுத்துகிறார்கள்.

The post புயல் வெள்ளத்தால் நகரம் முழுக்க குவிந்தது சென்னையில் ஒரு வாரத்தில் 57,192 டன் குப்பை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Managar ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்