×

சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் கைதான பெண் கோஷம்

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்திய அரியானாவை சேர்ந்த நீலம் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்,‘‘சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள், மணிப்பூருக்கு நீதி வழங்குங்கள், அரசியல் சட்டத்தை காப்பாற்றுங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்க முடியாது, சர்வாதிகாரத்தை அனுமதிக்க முடியாது. ஜெய் பீம், ஜெய் பாரத், வந்தே பாரத்’’ என்று கூச்சலிட்டபடி சென்றார்.

* யார் இந்த பிரதாப் சிம்ஹா?
குற்றவாளிகளுக்கு பாஸ் கொடுத்ததால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென பாஜ எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இவர், கர்நாடகா மாநிலம் சக்லேஷ்பூரில் பிறந்தவர். இந்துத்துவா அரசியல் கட்டுரைகளை எழுதினார். இதில் சில கட்டுரைகள் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக, நரேந்திர மோடியின் சுயசரிதையை எழுதினார். இதனால் மோடிக்கு நெருக்கமானவராக மாறினார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மைசூரு தொகுதியில் போட்டியிட பாஜ தலைமை பிரதாப் சிம்ஹாவுக்கு வாய்ப்பு அளித்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரதாப் சிம்ஹா, 2019 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மைசூரு எம்பியாக வலம் வருகிறார்.

* 3 மாதமாக போராடி பாஸ் பெற்றுள்ளனர்
கைது செய்யப்பட்ட மனோரஞ்சன் மைசூரி தொகுதியை சேர்ந்தவர் என்பதால் பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவர் தனது நண்பர் என சாகர் சர்மாவை அறிமுகப்படுத்தி உள்ளார். மக்களவைக்கு செல்ல இருவருக்கும் பாஸ் வேண்டுமென கடந்த 3 மாதமாக எம்பி அலுவலகத்தில் பலமுறை அலைந்துள்ளனர். எம்பிக்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு இதுபோன்ற பாஸ் தருவது வழக்கம் என்பதால், பிரதாப் சிம்ஹா அலுவலகத்தில் இருந்து மனோரஞ்சனுக்கு 2 பாஸ் தரப்பட்டுள்ளது. இவர்கள் திட்டப்படி 6 பேரும் மக்களவைக்கு செல்ல திட்டமிருந்ததாகவும், 2 பாஸ் மட்டுமே கிடைத்ததால் மனோரஞ்சன், சாகர் சர்மா மட்டுமே உள்ளே போயிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* ‘தவறு செய்தால் தூக்கிலிடுங்கள்’: குடும்பத்தினர் வேதனை
மைசூருவை சேர்ந்த மனோரஞ்சனின் தந்தை தேவ்ராஜ் கூறுகையில், ‘‘என் மகனை நான் ஆதரிக்கிறேன். அவன் மிகவும் நல்லவன். உண்மையானவன், நேர்மையானவன். அவன் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சமூகத்திற்கு தவறு செய்திருந்தால் அவனை தூக்கிலிடுங்கள்’’ என வேதனையுடன் கூறினார்.

கைதான் பெண் நீலமின் சகோதரர் ராம்நிவாஸ் கூறுகையில், ‘‘2 நாட்களுக்கு முன்புதான் நீலம் வீட்டிற்கு வந்து சென்றாள். டிவியில் அவளை பார்த்த உறவினர் ஒருவர் கூறிய பிறகுதான் எங்களுக்கு இந்த சம்பவமே தெரிந்தது’’ என்றார். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டம் ஜாரி கிராமத்தை சேர்ந்த அமோல் ஷிண்டே, ராணுவ ஆட்தேர்வில் பங்கேற்க டெல்லி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

* ஜனாதிபதியிடம் முறையிட இந்தியா கூட்டணி திட்டம்
மக்களவை பாதுகாப்பு விதிமீறல் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வீட்டில் சந்தித்து ஆலோசிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முறையிடுவது குறித்தும் முடிவெடுக்கப்பட உள்ளது.

* திக்… திக்… நிமிடங்கள்
மக்களவையில் எம்பிக்கள் பகுதியில் 2 நபர்கள் குதிப்பதை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து நேரில் பார்த்த பிற பொதுமக்கள் கூறுகையில், ‘‘அந்த 2 வாலிபர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எந்த கோஷமும் போடவில்லை. ஆனால் சட்டென்று, மாடத்தில் இருந்து எம்பிக்கள் இருக்கும் பகுதிக்குள் குதித்து, புகை குண்டுகளை வீசினர். இதை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. 5 அடுக்கு பாதுகாப்பை தாண்டி அவர்கள் குதித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது’’ என்றனர். இந்த சம்பவம் நடந்த சமயத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் சுமார் 30 முதல் 40 பேர் வரை அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* ஆன்லைனில் கிடைக்கும் கலர் புகை குண்டு
நாடாளுமன்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கலர் புகை குண்டுகள் விழாக்கள், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுபவை. இவை ஆன்லைனில் ரூ.287க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே?
பாதுகாப்பு குளறுபடிக்குப் பின் பிற்பகல் 2 மணி அளவில் அவை கூடிய போது இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச அனுமதித்தார். அப்போது பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கான நினைவிடத்தில் நாங்கள் மலரஞ்சலி செலுத்தினோம். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே இன்று தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 2001ல் நடந்ததுபோன்ற தாக்குதல் அல்ல இது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரத்தில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும், உயர்மட்ட பாதுகாப்பு தோல்வி அடைந்துவிட்டது என்பதும் தற்போது நிரூபணமாகி இருக்கிறது. அனைத்து எம்பிக்களும் துணிச்சலாக செயல்பட்டு அந்த இருவரையும் பிடித்துவிட்டனர். ஆனால், இவ்வளவு நடந்து கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.

* 45 நிமிடம் அனுமதி பெற்று 2 மணி நேரம் இருந்தனர்
பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த மனோரஞ்சன், சாகர் சர்மா இருவரும் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், 2 மணி நேரமாக அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்துள்ளனர். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் சம்மந்தப்பட்ட பார்வயாளர்களை பாதுகாப்பு உதவியாளர்கள் வெளியேற்ற வேண்டும். ஆனால், குறைந்த அளவே பணியாளர்கள் இருப்பதால் அவ்வாறு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டிற்கு முக்கிய காரணமாகும்.

* பார்வையாளர்களுக்கு தடை
மக்களவை பாதுகாப்பு குளறுபடியைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்திற்குள் பார்வையாளர்கள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

* முழு பொறுப்பு எம்பிக்கே
நாடாளுமன்ற விதிமுறைப்படி, பார்வையாளராக பாஸ் வழங்கப்பட்டவர் தனது உறவினரா, தனிப்பட்ட நண்பரா, நன்கு தெரிந்த நபரா என்பதை எம்பிக்கள் உறுதிபடுத்த வேண்டும். மேலும், பார்வையாளராக வரும் நபர்களுக்கு அவர்களுக்கு பாஸ் கொடுத்த எம்பியே முழு பொறுப்பேற்க வேண்டும்.

* அமித்ஷா பதவி விலக வேண்டும்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தை பாதுகாக்க தெரியாதவர்கள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள்? இது 2001ம் ஆண்டைப் போல மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவமாக நடத்திருக்கலாம். எனவே உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை என்ன செய்கிறது? அமித்ஷா வீராவேசமாக பேசுகிறாராரே தவிர நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியவில்லை’’ என்றார்.

* தீவிரமாக விசாரிக்க வேண்டிய விவகாரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் பாஜ எம்பி சம்மந்தப்பட்டுள்ளதால் இதை தீவிரமாக விசாரிக்க வேண்டியது அவசியம். இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இது மிகத் தீவிரமான பாதுகாப்பு குறைபாடு. எனவே ஒன்றிய உள்துறை அமைச்சரே நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டும். புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்’’ என்றார்.

* பாதுகாப்பு குறைபாடு
ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா கூறுகையில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் நடத்த சிறப்பு கூட்டத்தொடரிலேயே நாங்கள் வலியுறுத்தினோம். அப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட போது, பார்வையாளர்கள் பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷம் போட்டனர். அப்போதே நாங்கள், எதிர்காலத்தில் இப்படி யாராவது ஒழிக கோஷம் போட வாய்ப்புள்ளது என்று சொன்னோம். எங்களுக்கு மேல் பார்வையாளர்கள் கேலரி அமைந்துள்ளது. எனவே அங்கிருந்து யாராவது எதையாவது தூக்கி வீசலாம். நிச்சயமாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது’’ என்றார்.

* பாஜ எம்பி பதவி நீக்கப்படுவாரா?
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சசி பஞ்சா கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் அராஜகம் செய்த 2 நபர்களுக்கும் பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா தான் பாஸ் தர பரிந்துரைத்தள்ளார். அவரால் தான் அந்த 2 நபர்கள் நாடாளுமன்றத்திற்குள் பார்வையாளர்கள் மடத்திற்கு வந்துள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பும், நாட்டின் இறையாண்மைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எம்பிக்களுக்கான மக்களவை இணையதளத்தின் லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பகிர்ந்ததால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அதே போல, பாஜ எம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’’ என்றார்.

* தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதா?
டெல்லி போலீசார் அளித்த பேட்டியில், ‘‘இந்த சம்பவத்தில் 6 பேர் சம்மந்தப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அவர்களின் செல்போன் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பழக்கமானவர்கள். ஆன்லைனில் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை தீட்டி உள்ளனர். அனைவரும் குருகிராமில் ஒரே வீட்டில் தங்கியிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளனர். தற்போது வரை இவர்களுக்கு எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை’’ என்றனர்.

* அனைத்து கட்சி கூட்டம்
மக்களவை பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அப்போது அவையின் பாதுகாப்பு குறைபாடுகளை எம்பிக்கள் சுட்டிக் காட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு ஓம்பிர்லா கடிதம் எழுதுவதாக கூறி உள்ளார். இக்கூட்டத்தில், மஹுவா மொய்த்ரா போல பாஜ எம்பி பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர்.

The post சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் கைதான பெண் கோஷம் appeared first on Dinakaran.

Tags : Kaidana ,Neelam ,Ariana ,Kaithana ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்