×

ரூ.30 லட்சம் கேட்டு கடத்தினாங்க… ரூ.7,000 கேட்டு கெஞ்சுனாங்க… டம்மி போலீசின் காமெடி பேரம்

தர்மபுரி: சேலம் செவ்வாய்பேட்டை அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சம்பத் சிங். இவரது மகன் வினோத்சிங் (22). இவர் செவ்வாய்பேட்டையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியரான அதே பகுதியை சேர்ந்த புக்குராஜ் (21). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பெங்களூருக்கு எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க காரில் சென்றனர். அப்போது, தர்மபுரி மாவட்டம் மாரவாடி பிரிவு ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சென்றபோது சாதாரண உடையில் இருந்த 5 பேர் இவர்களது காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் போலீசார் எனவும், உங்களது காரை சோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து காரில் சோதனையிட்டனர். அப்போது அந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென காரினுள் ஏறி, வினோத் சிங் மற்றும் புக்குராஜை மிரட்டி, காருடன் கடத்திச் சென்றனர்.

பின்னர், சம்பத் சிங்கின் தம்பியான மனோகர் சிங் என்பவருக்கு போன் செய்து, ‘உங்களது அண்ணன் மகன் மற்றும் அவரது கடை ஊழியரை கடத்தியுள்ளோம், இருவரையும் விடுவிக்க ரூ.30 லட்சம் தர வேண்டும்’ என கூறியுள்ளார். மேலும் பணத்தை கொண்டு வரும் போது செல்போன் நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும் எனக்கூறி ஒரு நம்பரையும் கொடுத்து விட்டு போனை துண்டித்துள்ளார். பின்னர் மீண்டும் அந்த நபர் பேசிய நம்பருக்கு மனோகர் சிங் போன் செய்தபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி மனோகர் சிங், மதிகோண்பாளையம் போலீசில் புகாரளித்தார். அப்போது அந்த மர்மநபர் கொடுத்த செல்போன் நம்பருக்கு போலீசார் போன் செய்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில், கடத்தல்காரர்கள் மனோகர்சிங்கை மீண்டும் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர். அவர் அவ்வளவு பணம் இப்போது இல்லை எனக்கூறியவுடன், ரூ.10 லட்சமாவது கொடு என கேட்டுள்ளனர். அதற்கும் அவர் மறுக்கவே ரூ.3 லட்சம், ரூ.30 ஆயிரம் என படிப்படியாக இறங்கி வந்து இறுதியாக ரூ.7 ஆயிரத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ‘உள்ளத்தை அள்ளித்தா’ சினிமா படத்தில் மணிவண்ணனை கடத்திய கும்பலில் செந்தில், கவுண்டமணியிடம் பணம் கேட்டு மிரட்டுவார். ரூ.5 லட்சம் கேட்டு படிப்படியாக குறைத்து, கடைசியில் டெம்போ வைச்சு கடத்தியிருக்கோம் 4 ஆயிரமாவது கொடு என்று கெஞ்சுவார். அதேபோல இங்கும் ரூ.30 லட்சம் கேட்டு கடைசியில் ரூ.7 ஆயிரத்திற்கு இறங்கிவந்துள்ளனர். செல்போன் நம்பரின் சிக்னலை வைத்து குற்றவாளிகளை போலீசார் நெருங்கினர்.

போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்து கொண்ட கடத்தல் கும்பல், கடத்திய இருவரையும் சூளகிரி-ஓசூருக்கு இடையில் இறக்கிவிட்டு காருடன் தப்பியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து தப்பி வந்த இருவரும் மனோகர்சிங் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து கிருஷ்ணகிரி போலீசார் இருவரையும் மீட்டு மதிகோண்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, கடத்தல் நபர்களான 5 பேரில் ஒருவர் சில மாதங்களுக்கு முன், குட்கா கடத்தலில் ஈடுபட்டு தொப்பூர் போலீசில் சிக்கியுள்ளான். அவர் கடத்தப்பட்ட வினோத்சிங்கின் உறவினரிடம் வேலை செய்து வந்துள்ளான். குட்கா கடத்தலில் போலீசில் சிக்கியபோது, வினோத்சிங்கின் உறவினர் தன்னை ஜாமீனில் எடுக்காததால், ஆத்திரத்தில் இருந்துள்ளான். தற்போது, வழக்கிலிருந்து வெளியே வந்த அவன் பழிவாங்கும் நோக்கில் வினோத்சிங்கை கடத்தியது தெரியவந்துள்ளது.

The post ரூ.30 லட்சம் கேட்டு கடத்தினாங்க… ரூ.7,000 கேட்டு கெஞ்சுனாங்க… டம்மி போலீசின் காமெடி பேரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Sampath Singh ,Agrahara Street, Sewwaipet, Salem ,Vinod Singh ,Sewwaipettai ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...