×

தேசத்தில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் இது: நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட பெண் நீலம் தகவல்

டெல்லி: நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல; மாணவர்கள்; பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்காகவே முழக்கம் எழுப்பினோம் என நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட பெண் நீலம் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவைக்குள் அத்துமீறல்:

மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவிக் குதித்து தப்பிக்க முயன்ற நபர்களை எம்.பி.க்கள் பிடித்தனர். காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் உள்ளிட்ட சில எம்.பி.க்கள் சேர்ந்து இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அதாவது, மக்களவையில் அத்துமீறி உள்ளே நுழைந்த சாகர் சர்மா, மாணவர் மனோரஞ்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகை குண்டுகளை திறந்ததால் நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிறத்தில் புகை எழுந்ததாக உறுப்பினர்கள் புகார் கூறியுள்ளனர்.

இரு பெண்கள் உள்பட 4 பேர் கைது:

நாடாளுமன்றத்தின் வெளியே வண்ணத்தை உமிழும் பொருளுடன் போராட்டம் நடத்திய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மக்களவையில் அத்துமீறிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். மக்களவையின் உள்ளே நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அரியானாவை சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவை சேர்ந்த அன்மோல் ஷிண்டே என்ற 2 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்களவையில் புகைக் குப்பி வீசிப்பட்ட இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை:

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதான 2பேரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நாடாளுமன்றத்திலும் விசாரணையை தொடங்கினர். என்ஐஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்த வழக்கை விசாரிக்கும் என டெல்லி காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் மணிப்பூருக்கு ஆதரவாக முழக்கம்:

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைதானவர்கள் மணிப்பூருக்கு ஆதரவாக முழுக்கம் எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல: நீலம்

நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் அல்ல என நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட பெண் நீலம் தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள்; பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்காகவே முழக்கம் எழுப்பினோம். தேசத்தில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் இது என்று கூறினார். ‘சர்வாதிகாரத்தை நிறுத்து… மணிப்பூரில் வன்முறையை நிறுத்து…’ என கைதானவர்கள் முழக்கமிட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம் என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.

The post தேசத்தில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் இது: நாடாளுமன்றத்திற்கு வெளியே கைது செய்யப்பட்ட பெண் நீலம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Manipur ,Neelam ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...