×

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைத்துள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அருகே சுகாதார சீர்கேடு

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைத்துள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி சுகாதார சீர்கேடு நிலவுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு, வேலூர் மாநகராட்சி மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் ஆகிய 11 நகராட்சிகள் மற்றும் நாட்றம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ₹1,295 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இதன் மூலம் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஆங்காங்கே தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாச்சல், பால்னாங்குப்பம், ஏலகிரி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியின் சுற்றுப்பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி தற்போது தண்ணீர் வடிந்து அங்கு செடி, கொடிகள் முளைத்து புதர் போன்று காட்சியளித்து வருகிறது.

இதனால், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பகுதியில் ஆங்காங்கே உள்ள சிறு துளைகள் மூலம் விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைந்து விழுந்து விடும் நிலையும், தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர அங்குள்ள தண்ணீர் ஏற்றும் அறை சுற்றுப்பகுதியிலும் புதர் மண்டி உள்ளதால் நீரேற்றும் நபர்கள் அறைக்குள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும், அதன் அருகிலேயே நடைபாதையில் பொதுமக்கள் குப்பைக்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் அவ்வழியாக செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவிரி கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் நீரேற்றும் அறை அமைந்துள்ள பகுதியில் மண்டியுள்ள செடி, கொடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அமைத்துள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அருகே சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Water ,Jolarpet ,Bachal panchayat ,
× RELATED கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 5...