×

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் குடியாத்தம், பேரணாம்பட்டில் 50 யானைகள் நடமாட்டம்?

*விவசாயிகள் அச்சம்

குடியாத்தம் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் தமிழக-ஆந்திர-கர்நாடக மாநில வனச்சரகங்களை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பெரிய 2வது வனச்சரகமாக குடியாத்தம் வனச்சரகம் உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி, புள்ளிமான்கள், முயல் மற்றும் காட்டுக்கோழி உள்ளிட்டவை உள்ளது.

இந்நிலையில் குடியாத்தம்- பேரணாம்பட்டு வனச்சரக பகுதிக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்வது வழக்கமாக உள்ளது. யானைகளின் நடமாட்டத்தை அறிய விவசாயிகள் சார்பில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதுதவிர வனத்துறை சார்பில் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. யானைகளின் நடமாட்டம் இருந்தால் பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தம் காண்பித்தும் விரட்டி வருகின்றனர்.

ஆனாலும் ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து குடியாத்தம் பகுதிக்கு யானைகள் அடிக்கடி வருகிறது. அப்போது வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் யானைகளுக்குள் திடீரென சண்டை ஏற்படுகிறது. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், வீடுகளையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 குட்டிகளுடன் சுமார் 50 யானைகள் கிருஷ்ணகிரியில் இருந்து குடியாத்தம், பேரணாம்பட்டு வனச்சரக பகுதிக்குள் நுழைந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினரிடம் கேட்டபோது, சமூக வலைதளங்களில் உலா வரும் யானை நடமாட்ட காட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியாத்தம், பேரணாம்பட்டு வனப்பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யானைகள் கூட்டமாக வந்துள்ளதாக கூறப்படுவதால் காட்டுப்பகுதிக்குள் சென்று கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர். இதனிடையே யானைகள் நடமாட்டம் குறித்த வீடியோ தற்போது குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் வைரலாகி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் குடியாத்தம், பேரணாம்பட்டில் 50 யானைகள் நடமாட்டம்? appeared first on Dinakaran.

Tags : Gudiyattam ,Vellore District Gudiyattam Forest Park ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka State Forest Parks ,Tamilnadu ,Peranambat ,
× RELATED காணாமல் போன குளத்தை தேடி...