×

நவரத்தினங்களின் ராணி வைரம்!

நவரத்தினங்களின் ராணி வைரமாகும். இது எரிந்து கரைந்து புதைந்து போன மரங்களின் கரியிலிருந்து எடுக்கப்படுவதால் கரிமம் (nonmetal) எனப்படுகிறது. காதல் தேவதையான வீனஸ் அல்லது சுக்கிரனுக்கு உரியது. வைரம் என்பது வடமொழியில் வச்ரம் (வஜ்ரம்) என்று அழைக்கப்படும். வஜ்ரம் என்றால் உறுதியானது. வளைக்க உடைக்க முடியாதது. வைரம் பாய்ந்த கட்டை என்றால் உறுதியான மரம். அதன் நடுவில் அதன் பழமையும் உறுதியும் குறிக்கும் வகையில் நிறம் மாறுபட்டு இருக்கும். உயிர் உசிர் என்று ஆவது போல வய்ரம் – வச்ரம் என்று வடமொழியில் மாறியது.

வைரம் கிடைக்குமிடம்

வைரம் வடக்கே கிடைக்காது. நம் நாட்டின் தென்பகுதியில் மட்டுமே கிடைக்கின்றது. இங்கு பெண்ணாறு, கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளின் படுகைகளில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வைரங்கள் கிடைத்ததாகக் கூறுகின்றனர். நல்ல வெண்மையான வைரம் ஆற்று ஓரங்களில் தான் கிடைக்கும். நீல நிற வைரம்தான் சுரங்கங்களில் கிடைக்கும். ஆப்பிரிக்காவில் உலகில் கிடைக்கக்கூடிய வைரங்களில் 90% கிடைக்கின்றது.

வைரத்தின் தன்மை

வைரத்தையும் கண்ணாடியையும் அறுக்க வைரம்தான் உதவும். வைரம் மிகவும் உறுதியானது. அதன் ஒவ்வொரு துகளும் எண்கோணப் பட்டை வடிவில்தான் இருக்கும். வெள்ளை ஒளியை சிதறச் செய்து நிறமாலையை உருவாக்கும். சிறந்த மின் காப்பு ஆற்றல் உடையது.

வைரத்தை யார் அணியலாம்?

வைரத்திற்குரிய கிரகம் சுக்கிரன் என்பதால் சுக்கிரன் ஆட்சியாக இருக்கும் ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் ரிஷபம், துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பவர்கள் அணியலாம். சுக்கிரனுக்கு புதன் நட்பு கிரகம் என்பதனால் புதன் ராசிகளான மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வைரம் அணியலாம். அதுபோல சுக்கிரனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் மகர, கும்ப ராசிக்காரர்களும் வைரம் அணியலாம்.

யார் அணியக்கூடாது?

சுக்கிரனுக்குப் பகைவராக விளங்கும் குரு ராசியான தனுசு, மீனம் ராசிக்காரர்களும் லக்கினக்காரர்களும் வைரம் அணியக்கூடாது. சனிக்குரிய மகர, கும்ப ராசியில் பிறந்த அல்லது அந்த லக்கினங்களில் பிறந்தவர்கள் வைரத்தை தங்கம் வெள்ளியில் சேர்த்து அணிவதை விட வைரத்தை பிளாட்டினம் நகையில் சேர்த்து அணியலாம்.

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்!

சுக்கிரனுக்கு உரிய வைரத்தை அணிவதால் செரோட்டோனின் டோப்போமின் போன்ற மன மகிழ்ச்சிக்குரிய (feel good) சுரப்பிகள் அதிகம் சுரந்து அவர்களுக்கு ஆக்கபூர்வமான எண்ணங்களும் உற்சாகமும் உண்டாகும். சுக்கிரன் வலுவாக உள்ளவர்கள் வைரம் அணியும்போது விலை மிகுந்த துணிமணிகள், ஆபரணங்கள் கிடைக்கும். சொகுசான பயணங்கள் அமையும். கார் அல்லது விமானத்தில் இவர்கள் அடிக்கடி பயணம் செய்வர். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் விருப்பம் அதிகம் இருக்கும். அடிக்கடி புது போன் வாங்குவது புது கணினி வாங்குவது புது கார் மாற்றுவது என்று புதிது புதிதாக எதையாவது வாங்கிக் கொண்டும் மாற்றிக் கொண்டும் இருப்பார்கள்.

எந்தத் தொழிலுக்கு வைரம் நன்மை தரும்?

ஷோ பிசினஸ் செய்பவர்களுக்கு வைரம் நற்பலன் தருவதாக அமையும். பலருக்கும் தங்கள் உடல் அழகை காட்டக்கூடிய தொழில், தங்களின் நவீன, புதிய உடைகளை ஆபரணங்களைக் கண்டு மக்கள் ரசிக்கக்கூடிய தொழிலில் இருப்பவர் எவரும் வைரம் அணியலாம். சின்னத்திரை, வெள்ளித் திரையில் நடிப்பவர்கள் வைரம் அணியலாம், மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு வைரம் நல்ல லாபத்தை தரும். பியூட்டி பார்லர் (அழகு கலை நிறுவனங்கள்) வைத்திருப்பவர்களுக்கு வைரம் நல்ல லாபத்தை தரும்.

கலை நிகழ்ச்சிகளில் குறிப்பாக டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் வைரம் அணிவதால் மேலும் பல வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். நடனம், நாடகம் போன்ற துறையினர் வைரம் அணியலாம். ஐ.டி. துறையில் இருப்பவர்கள், வாழ்க்கையில் கேளிக்கைகள் முக்கியம். குடும்பம் உறவு சொந்த பந்தம் முக்கியமில்லை என்று நினைப்பவர்களுக்கு வைரம் சிறப்பான பலனை தரும். இதில் விதிவிலக்கு ரிஷப ராசிக்காரர்கள் மட்டும்.

ரிஷபமும் வைரமும்

ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பம், வீடு, சாதி சனம், ஊர், நாடு, மக்கள், மொழி என்று சொந்தப் பற்று மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் வைரம் அணிவது சிறப்பானதாகும்.

எப்போது அணிய வேண்டும்?

வைரத்தை நல்ல வைர வியாபாரியிடம் போய் பார்த்து வாங்க வேண்டும். அவர்கள் மூன்று சி என்று carot, cut, clarity பார்த்து வைரத்தை விற்பார்கள். அவ்வாறு நல்ல வைர வியாபாரியிடம் வாங்கும் வைரத்தை நல்ல முறையில் குலதெய்வத்தின் முன்வைத்தும் லட்சுமி தேவியின் முன்வைத்தும் பூஜை செய்து வளர்பிறை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் அணிய வேண்டும். கட்டை விரல் மேடு சுக்கிர மேடு என்பதால் கட்டை விரலில் அணிவது மிகவும் சிறப்பு.

நல்ல வைரம் என்றால் அதை அணிந்ததும் ஒரு மாதத்திற்குள் பலனைக் காட்டிவிடும். தோஷமுள்ள வைரம் என்றால் துக்க நிகழ்வு ஏதேனும் நடைபெறும். நல்ல வைரத்தை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பதில்லை. ஆனால் தற்காலத்தில் மிகச்சிறந்த வைரங்கள் அதிகமாக விற்கப்படுவதில்லை. எனவே ஐந்தாறு ஆண்டுகளில் வைரத்தை மாற்றிக் கொள்வது சிறப்பு.

அணியும் முன்பு என்ன செய்ய வேண்டும்?

வைரத்தை அணியும் முன்பு பால், தேன், இனிப்பு, கற்கண்டு போன்றவை கலந்த சுத்தமான தண்ணீரில் வைர மோதிரம் அல்லது வைர மாலை அல்லது வைரத்தோடு அல்லது வைர மூக்குத்தியை சில நிமிடங்கள் உள்ளே நனைத்து எடுத்து செல்வத்துக்கு அதிபதியான திருமகளின் பாதத்தில் சிறிது நேரம் வைத்து திருமகளை வணங்கி வசதி வாய்ப்பு இருந்தால் லட்சுமி பூஜை நடத்தி வைரத்தை அணிந்து கொள்வது நீண்ட காலத்திற்கு லாபத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கும்.

விடிவெள்ளி

சுக்கிரன் வெண்மையான ஒளி உடையது. அதனால் வானத்தில் நட்சத்திரத்தைப் போலத் தோன்றும். எனவே அதனை வெள்ளி என்கின்றனர். சூரியன் உதயமாவதற்கு சற்று முன்னரே சுக்கிரன் கீழ் வானத்தில் தெரியும். எனவே அதை விடிவெள்ளி என்று அழைப்பார்கள்.

சூரியன், புதன், சுக்கிரன்

மேற்கு வானத்தில் மாலை வேளையில் தெரிகின்ற நட்சத்திரம் என்று நம்பப்படுகின்ற கிரகம் புதன் ஆகும். சுக்கிரன், புதன், சூரியன் மூவரும் ஏறத்தாழ சேர்ந்தே ராசி மண்டலத்தில் பயணிக்கிறார்கள். இம்மூன்று கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றுமோ ஒரே ராசியில் சேர்ந்து இருப்பதை பலருடைய ஜாதகங்களில் காணலாம்.

வைரம் அணிவதால் என்ன பயன்?

வைரம் லௌகீக இன்பங்களை வாரி வழங்கும். உணவு, உடை, உறையில், சொகுசான வாழ்க்கை தரும். நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபரின் பிள்ளைகள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும். இவர்கள் வைரம் அணிந்திருப்பர். வைரம் அணிவதால் படைப்பாற்றல் மிகும். முக வசீகரம் ஏற்படும். காதல் உறவை வைரம் இனிமையாக்கும். திருமண பந்தத்தை உறுதி செய்யும். வைரம் அணிபவர்களுக்கு ஆடம்பர வேட்கையும் ஆசைகளும் அதிகமாக இருக்கும். எந்நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். மது, மங்கை மற்றும் உல்லாசங்களில் ஈடுபடுவார்கள். இம்மகிழ்ச்சியே அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

The post நவரத்தினங்களின் ராணி வைரம்! appeared first on Dinakaran.

Tags : Diamond ,Navaratnams ,Navaratnam ,
× RELATED விகேபுரம் சேனைத்தலைவர் பள்ளி வைர விழா