×

கமண்டல நாகநதி ஆற்றில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.2.75 கோடி மதிப்பு கடைகள் அகற்றம்

*ஆரணியில் அதிகாரிகள் அதிரடி

ஆரணி : ஆரணியில் கமண்டல நாகநதி ஆற்றில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.2.75 கோடி மதிப்பிலான கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாகநநி ஆற்று மேம்பாலம் அருகில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்க் அருகில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை, பங்க் உரிமையாளரும் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான மகேஷ்பாபு ஆக்கிரமித்து விளம்பர பலகை வைப்பதற்காக இரும்பு ஆங்கில்கள் மற்றும் கடைகள் கட்டி சுற்றுசுவர் அமைத்துள்ளார்.

நாகநதி ஆற்றை ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருப்பதால் புயல் மற்றும் தொடர் கனமழையின்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ள பாதிப்புகள் ஏற்படும். அதனால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறையிடம் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்பேரில், நீர்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கமண்டல நாநதி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள ஆற்றை ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து, நீர்வளத்துறை உதவி பொறியாளர் மணிமாறன், வருவாய்துறை மண்டல துணை வட்டாசியர் தேவி, மின்வாரிய உதவி பொறியாளர் சேகர், விஏஓ புருஷேத்தமன், டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்ஐகள் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆற்றை ஆக்கிரமித்து வைத்திருந்த இடம், கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அதிகாரிகள் அகற்றினர்.

இதன்மூலம் நீர்வளத்துறைக்கு சொந்தமான ரூ.2.75 கோடி மதிப்பு 10 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, கமண்டல நாகநதி ஆற்றுக்கு சொந்தமான இடம் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள இடங்களை தனிநபர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post கமண்டல நாகநதி ஆற்றில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்திருந்த ரூ.2.75 கோடி மதிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Water Resources Department ,Kamandala Naganadi river ,Arani ,Kamandala Naga river ,Dinakaran ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...