×

ஆன்மிகம் பிட்ஸ்: சிலந்திக்கும் அருளிய சிவன்

சிவன் கோயிலில் பைரவரே மூலவர்

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ளது பைரவ நாதஸ்வாமி கோயில். இங்கு பைரவர்தான் மூலவர். கடன் தொல்லை நீங்க அஷ்டமி தேய்பிறையில் இவரை பூஜை செய்கிறார்கள். சாபம், பாவம், கடன் தொல்லை, நோய் ஆகிய அனைத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கும் கோயில் இது! கோயிலின் இடது ‘மூலை’யில் சிவன் தனி சந்நிதானத்தில் இருக்கிறார்!

மும்மத சங்கமம்

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகில் தர்ம ஸ்தலா என்ற ஊரில் மஞ்சுநாத சுவாமி என்ற சிவன் ஆலயம் உள்ளது. இக்கோயிலை சமண மதத்தினர் நிர்வகிக்கின்றனர். பூஜை செய்யும் அர்ச்சகர்கள், வைணவர்கள். இறைவனுக்கு துளசி இலையால்தான் பூஜை செய்கின்றனர்!

குடும்பம் ஒரு கோயில்

சிவாலயங்களில் பொதுவாக சிவபெருமான் கருவறையில் தனியாக லிங்க வடிவில் இருப்பார். சில ஆலயங்களில் பார்வதியுடன் இருப்பார். ஒரே கருவறையில் சிவன், தனது மனைவி, மக்களுடன் இருக்கும் ஒரு கோயில் உள்ளது. கோவையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் ராயர் தோட்டம் ஸ்ரீசக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோயிலின் மூலஸ்தானத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகனை கருவறையில் ஒருசேர தரிசிக்கலாம்.

லிங்க நடராஜர்

திருவாரூர் அருகிலுள்ள விளமல் பதஞ்சலீஸ்வரர் கோயிலில், பதஞ்சலி, வியாக்ரபுரீஸ்வர முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன் லிங்க வடிவிலும் நடன கோலத்திலும் காட்சி தருவதாக ஐதீகம். எனவே, இங்கு கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறத்தில், நடராஜரின் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு முன் சிவபாதம் இருக்கிறது. ஆனித் திருமஞ்சனத்தின் போது நடராஜருக்கு மட்டுமல்லாமல் இந்தப் பாதத்திற்கும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பாறைக்குள் நீரூற்று

மதுரை மாவட்டம் பேறையூரில் உள்ள மொட்டைமலையின் உச்சியில் மல்லிகார்ஜுனர் என்ற சிவன் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் அருகே ஒரு அதிசய நீரூற்று உள்ளது. 100 அடி உயரமுள்ள, கருங்கல் மலையிலிருந்து இந்த நீரூற்றுக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்பது இதுவரை கண்டு பிடிக்க முடியாத அதிசயமாக இருக்கிறது. இந்த சுனைக்கு வரும் நீர் மருத்துவ குணம் நிறைந்தது என்பதால் மக்கள் காத்திருந்து அதை வாங்கிச் செல்கிறார்கள்.

சிலந்திக்கும் அருளிய சிவன்

வேடன் கண்ணப்பனை கண்ணப்ப நாயனாராக ஈசன் மாற்றிய தலம் இது. முற்பிறவி சாபத்தால் சிலந்தியாய் மாறிய ஊர்ணநாபன் இந்த ஈசனின் மேல் வெயில் படாமலிருக்க வலை பின்னி, குடை பிடித்தான். அந்த சிலந்தியின் பெயர் ஸ்ரீ. அதே போல காளன் எனும் நாகத்திற்கும் அத்தி எனும் யானைக்கும் இத்தலத்தில் ஈசன் அருள்புரிந்ததால் இத்தலம் ஸ்ரீகாளஹஸ்தி என அழைக்கப் படுகிறது. கேது தோஷ பரிகாரத்தலமான இத்தலத்தில் காளஹஸ்தீஸ்வரர் தன் தேவி ஞானப்ரசுன்னாம்பிகையுடன் அருள்கிறார்.

சிவன் கோயிலில் சடாரி

பொதுவாக பெருமாள் கோயில்களில் மட்டுமே சடாரி சார்த்தப்படும். ஆனால் கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருநல்லூர் சிவன் கோயிலில் தரிசனம் செய்ய வருகின்றவர்களுக்கு, சிவபிரானின் திருவடி பதிக்கப் பெற்ற சடாரியை சாத்தும் வழக்கம் நிலவுகிறது. திருநாவுக்கரசர் நல்லூருக்கு வந்து சிவபெருமானை வழிபட்டபோது சிவனின் திருவடி சூட்டப்பெற்றார். இந்த அரிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகவே இன்றும் சடாரி சார்த்தும் வழக்கம் உள்ளது.

விஸ்வரூப சிவன்

பு துக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேருந்துநிலையம் அருகே மெய்நின்ற நாத சுவாமி மற்றும் ஸ்ரீஒப்பில்லாமணி அம்மன் என்ற சிவத்தலம் அமைந்துள்ளது. அதன்எதிரே, ஆசியாவிலேயே மிக உயரமான 81 அடி சிவ பெருமானின் நீண்ட நெடிய நின்ற திருக்கோலம் அமைந்துள்ளது. நக்கீரரால் பாடப்பட்ட தலமிது.

தொகுப்பு: அனந்த பத்மநாபன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: சிலந்திக்கும் அருளிய சிவன் appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,Bhairavare ,Shiva temple ,Bhairava Nathaswamy temple ,Trichy Periya ,Bhairava ,Shiva ,
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்