×

திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்: டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

தாம்பரம்: திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டிருந்தது. டிரைவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம் – சென்னை கடற்கரை மார்க்கத்தில் தினமும் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில்கள் சென்று வருகிறது. நேற்று காலை சுமார் 7 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில் சென்றது. அப்போது, தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர், இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் அரை இன்ச் அளவிற்கு விரிசல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் ரயில் நிலைய அலுவலகத்திற்கு தெரிவித்தார். அங்கிருந்து ஊழியர்கள் வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்றது. இதனால் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் பஸ்களை பிடித்து சென்றனர். தண்டவாள விரிசல் சரிசெய்யும் பணி முழுமை அடைந்த பின்னர் வழக்கம்போல ரயில்கள் செல்ல தொடங்கியது. எனினும் விரிசல் ஏற்பட்ட பகுதியில் ரயில்கள் மெதுவாக சென்றன.

செங்கல்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஒரு நாள் முழுவதும் அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில் திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தண்டவாள விரிசல்களினால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரயில்வே தண்டவாளங்களை அவ்வப்போது ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திரிசூலம் – மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்: டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Trishulam ,Meenambakkam ,Tambaram ,Trishulam - Meenambakkam ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்