×

அண்ணன் ஜெகன் மோகனை வீழ்த்த ஆந்திர அரசியலில் களமிறக்கப்படும் சர்மிளா: காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் வியூகம் அடுத்த 100 நாளில் மவுன புரட்சி நடக்கும்

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை வீழ்த்த அவரது தங்கையான சர்மிளாவை களமிறக்க காங்கிரஸ்- தெலுங்கு தேசம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ‘அடுத்த 100 நாட்களில் யாரும் எதிர்பாராத மவுன புரட்சி நடக்கும்’ என மாநில காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. வரும் தேர்தலில் ஆளும்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீண்டும் தனித்து போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பாஜக, ஜனசேனா கூட்டணியில் உள்ளது.

ஆந்திராவில் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கி தற்போது ஆட்சி நடத்தி வரும் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஜெகன்மோகனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரது தங்கை ஒய்எஸ்.சர்மிளா தெலங்கானாவில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். ஆந்திர அரசியலை விரும்பாததால் அவர் தெலங்கானாவுக்கு சென்றிருந்தார். ஆனால் தற்போது அவரது அண்ணனான ஜெகன்மோகனை வீழ்த்த சர்மிளாவை ஆந்திர அரசியலுக்கு கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி ஆகியோர் விரைவில் ஆந்திராவுக்கு வர உள்ளனர். அப்போது அவர்களை சர்மிளா சந்திக்க உள்ளதாகவும், தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளதாகவும், அப்போது ஆந்திர காங்கிரசில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் கிடுகு ருத்ரராஜு கூறுகையில், `ஒய்எஸ்.சர்மிளா ஆந்திர அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது உண்மைதான். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க உள்ளார். அவரை காங்கிரஸ் கட்சி வரவேற்க தயாராக உள்ளது. இன்னும் சில வாரங்களில் ஆந்திராவுக்கு ராகுல், பிரியங்கா ஆகியோர் வர உள்ளனர். விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை தனியாருக்கு மாற்ற இருப்பதை கண்டித்து தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவளிக்க வருகின்றனர். அப்போது ராகுல், பிரியங்காவை ஒய்எஸ்.சர்மிளா சந்திக்க ஏற்பாடு நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். ஆந்திர அரசியலில் அடுத்த 100 நாட்களில் யாரும் எதிர்பாராத மவுன புரட்சி நடக்கும். குறிப்பாக ஆந்திர அரசியலில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும்’ என்றார்.

* தனித்து விடப்படும் பாஜக

தெலங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபுநாயுடு மறைமுக ஆதரவளித்திருந்தார். ஆனால் வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியையும் இழுத்து காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தல் களம் காண சந்திரபாபு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெகன்மோகனை பழிதீர்க்க அவரது தங்கையை வைத்து காய் நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வரும் தேர்தலில் பாஜக தனித்து விடப்படுவது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் பாஜகவுக்கும், ஜெகன்மோகனுக்கும் ஒரேநேரத்தில் ெசக் வைக்க காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சந்திரபாபு திட்டமிட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

The post அண்ணன் ஜெகன் மோகனை வீழ்த்த ஆந்திர அரசியலில் களமிறக்கப்படும் சர்மிளா: காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் வியூகம் அடுத்த 100 நாளில் மவுன புரட்சி நடக்கும் appeared first on Dinakaran.

Tags : Sharmila ,Annan Jagan Mohan ,Congress ,Desam ,Tirumala ,Telugu Desam ,Chief Minister ,Jaganmohan ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...