×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3,449 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் 3,449 பேருக்கு தலா ரூ.4,000 ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* அன்பைவிட நன்றியேது

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கண்ணுக்கு ஒரு இடர் என்றால் நொடிப்பொழுதில் காக்க வரும் கை போல, தலைநகர் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் மிக்ஜாம் புயல் பாதிப்பை போக்க களம் கண்ட 3,449 தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு 4000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினேன். பயன்தூக்கார் செய்த உதவிக்கு அன்பைவிட நன்றியேது? என தெரிவித்துள்ளார்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3,449 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ஊக்கத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Migjam cyclone ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Migjam ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயலால்...