×

திருமழிசை சிட்கோ தொழிற்சாலைகளில் மழைநீரில் மூழ்கி ரூ.100 கோடி இயந்திர பாகங்கள் சேதம்: இழப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்: திருமழிசை சிட்கோ தொழிற்சாலைகளில் மழைநீரில் மூழ்கி ரூ.100 கோடி இயந்திர பாகங்கள் சேதமடைந்துள்ளன. அங்கு இழப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருமழிசை சிட்கோவில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் புகுந்த மழைநீரால் ரூ.100 கோடிக்கு சேதமடைந்த நிலையில், இயந்திர பாகங்களை பராமரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் உற்பத்தி பணிகள் தொடங்குவதற்கு ஒரு வாரமாகும் சூழ்நிலை உள்ளதாக திருமழிசை தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பூந்தமல்லி அடுத்த திருமழிசை சிட்கோவில் 300 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பியது. இதேபோல் நேமம் ஏரியும் நிரம்பியதால் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்துவிட்டது. மேலும் ஏற்கெனவே சிட்கோவில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில், ஏரியும் திறந்துவிட்டதால் 200 தொழிற்சாலைகளுக்குள் மழை நீர் புகுந்து குளம் போல் தேங்கியது.

அதோடு, நீர்வரத்தும் அதிகரித்ததால் தொழிற்சாலைக்குள் இயந்திர பாகங்களும் மூழ்கின. இதையடுத்து இயந்திர உதிரிபாகங்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டதால் தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டனர். தொழிற்சாலைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் ரூ.100 கோடி மதிப்பிலான இயந்திர பாகங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் கடந்த ஒருவாரமாக தொழிற்சாலைகளில் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமழிசை சிட்கோவில் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் திருமழிசை சிட்கோ அதிகாரிகளுக்கு கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் திருமழிசை தொழிற்சாலை உற்பத்தியாளர் சங்க வளாக அரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், திருமழிசை சிட்கோ உதவி செயற்பொறியாளர் மணிமுத்து ஆகியோர் நிர்வாகிகளுடன் புயல், மழை சேதம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, திருமழிசை தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஜராஜ் கூறுகையில், இயந்திரங்களில் பழுது ஏற்பட்ட காரணங்களால் கடந்த ஒரு வாரமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு நாள்தோறும் ரூ.6 கோடி அளவில் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தொழிற்சாலைக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றி உற்பத்தி பணிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமாகும். அதற்கு முன்னதாக மழை நீரில் மூழ்கிய இயந்திர உதிரி பாகங்களை பழுது நீக்கம் செய்து பராமரிப்பு செய்வதற்கு போதுமான பணியாளர்கள் கிடைக்காத நிலையுள்ளது. அதனால், இயந்திர பாகங்கள், மோட்டார்களை அதிகளவு திறன் கொண்ட மின்விளக்குகளை பயன்படுத்தி காயவைக்கும் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். அதனால், மீண்டும் தொழிற்சாலைகளை இயக்குவதே பெரும் சவாலாக அமைந்துள்ளது. எனவே அரசாங்கம் எங்கள் நிலையறிந்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

The post திருமழிசை சிட்கோ தொழிற்சாலைகளில் மழைநீரில் மூழ்கி ரூ.100 கோடி இயந்திர பாகங்கள் சேதம்: இழப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thirumazhisai ,CITCO ,Thiruvallur ,Thirumazhisai CITCO ,Dinakaran ,
× RELATED சென்னையில் சோடியம் ஹைட்ராக்ஸைடு...