×

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், குடிமைப்பணிகள் 2023 முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதி

சென்னை: தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, மாதிரி ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இனவாரியாகவும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த ஆர்வலர்கள் பயனடையும் வகையிலும் இப்பயிற்சி மையம் கடந்த 57 ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2023- ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 149 தேர்வர்களில், 15 மகளிர் மற்றும் 22 ஆண்கள் ஆகமொத்தம் 37 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 5 ஆர்வலர்கள் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்தவர்கள்; அதிகபட்சமாக 6 ஆர்வலர்கள் புவியியல் பாடத்தை தேர்வு செய்தவர்கள். இவர்களுக்கு, 2023 ஜூன் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 24 தேதி வரை உண்டு உறைவிடத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு பயிற்சி மையத்திலிருந்து, தேர்வு மையத்திற்கு சென்று வர சிறப்புப் பேருந்து வசதி செய்து தரப்பட்டது. மேற்குறித்த காலத்திற்கு ஊக்கத் தொகையாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வர் ஒருவருக்கு தலா ரூ.25,000/- வீதம் வழங்கப்பட்டது.

தற்போது, இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு பணியில் உள்ள மற்றும் ஒய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும் இப்பயிற்சி மையத்தில் பயிற்சிப் பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தவிர, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற தேர்வர்களும், இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர்.

இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9345766957 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள். www.civilservicecoaching.com என்ற விரைவில் அறிவிக்கப்படும். இம்மையத்தில் மாதிரி ஆளுமைத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு, டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000/- ஆண்டு தோறும் இம்மையத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

The post அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், குடிமைப்பணிகள் 2023 முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதி appeared first on Dinakaran.

Tags : All India Civil Services Exam Coaching Center ,Civil Services 2023 ,Chennai ,All India Civil Service Exam Training Center ,Tamil Nadu Government ,All India ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...