×

தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் : திருச்சி சிவா எம்.பி. பேச்சு

டெல்லி; தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விதிகளில் மாற்றம் செய்யும் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரியதாக விமர்சிக்கப்படும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி இடம்பெற மாட்டார். இந்த நிலையில், தேர்தல் ஆணையர் நியமன மசோதாவிற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டதாக இல்லை. அரசின் விருப்பத்திற்கு ஏற்ப நியமனம் மேற்கொள்ளவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் என்பது 140 கோடி மக்களின் நம்பிக்கை. தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு ஆகும். தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.

The post தேர்தல் ஆணையர் நியமன மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் : திருச்சி சிவா எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : parliamentary selection committee ,Trichy Siva ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...