×

கேஆர்பி., அணையில் இருப்பு திருப்திகரம் 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணையில் போதிய அளவில் தண்ணீர் இருப்பு உள்ளதால், 2ம் போக நெல் சாகுபடிக்கு, இம்மாத இறுதியில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக கே.ஆர்.பி அணை, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை, ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை மற்றும் சின்னாறு அணை, பாரூர் பெரிய ஏரி ஆகிய அணைகள் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையாலும், தற்போது பெய்து வரும் மழையாலும், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் விவசாயத்தை விட்டு, வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச்சென்றவர்கள் கூட, மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து ஆண்டுக்கு 2 முறை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி முதல்போக சாகுபடிக்கு ஜூலை மாதத்திலும், அணையின் தண்ணீர் இருப்பை பொருத்து, 2ம் போக சாகுபடிக்கு டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு அணையில் போதிய தண்ணீர் உள்ளதால், 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் இம்மாதம் இறுதியில் திறக்க வாய்ப்புள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், நேற்றைய நிலவரப்படி 50.65 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டுஇருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 306 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது.

அணையின் இருந்து பாசனத்திற்கு, அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய் வழியாக, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். வலதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 87 கனஅடியும், இடதுபுற கால்வாய் மூலம் விநாடிக்கு 93 கனஅடியுமாக மொத்தம் 180 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வே அள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். 2ம் போகத்திற்கு போதிய அளவு அணையில் தண்ணீர் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கேஆர்பி அணை பாசன விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், இந்தாண்டு 2ம் போகத்திற்கு தேவையான அளவு தண்ணீர் 120 நாட்களுக்கும் திறந்துவிட வாய்ப்புள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதன் மூலம் நெல் பயிரிடும் விவசாயிகள் மட்டுமின்றி, இந்த பகுதியில் உள்ள தென்னை, பூச்செடிகள், காய்கறி தோட்டங்கள் என பல்வேறு விவசாய பணிகளை செய்து வரும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

மேலும், 2ம் போக பாசனத்திற்கு தேவையான தண்ணீர் அணையில் இருப்பு உள்ளதால், தற்போதே விவசாயிகள் தங்கள் நிலங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நெல் நாற்று விட ஆரம்பித்துள்ளனர். எனவே, இம்மாத இறுதிக்குள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்,’ என்றனர்.

The post கேஆர்பி., அணையில் இருப்பு திருப்திகரம் 2ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்