×

சமவெளி பகுதிகளுக்கு யானைகள் வருவதை தடுக்க 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழிகள் வெட்ட முடிவு

*வனத்துறையினர் தகவல்

ஈரோடு : ஆசனூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழிகள் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆசனூர் வனக்கோட்டத்தில் தாளவாடி, ஜீரகஹள்ளி, கேர்மாளம் மற்றும் ஆசனூர் ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இச்சரகங்களில் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி சமவெளிப்பகுதிகளுக்கு வந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றது.

இதைதடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அகழிகளை அமைக்க வேண்டும் என்றும், தூர்ந்துபோய் உள்ள அகழிகளை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சூரிய தொங்கு மின் வேலி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆசனூர் வனக்கோட்ட பகுதியில் 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானைகள் செல்வதை தடுப்பதற்கான அகழிகள் அமைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு புதிதாக 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை அகழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானைகள் அகழிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் வெட்டப்படாமல் உள்ள 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக அகழிகள் அமைக்கவும், 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை அகழி பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படும்.

பாறைகள், ஓடைகள் போன்ற இடங்களில் சிறப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், சூரிய தொங்கு மின் வேலிகளை அமைக்கவும் ரயில் தண்டவாளங்களை கொண்டு வேலிகளை அமைக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். தாளவாடி வட்டாரத்தில் காப்புக்காடுகள் வழியாக செல்லும் சாலையின் இரு புறமும் உள்ள புதர் செடிகளை ஒவ்வொரு புறமும் 15 மீட்டர் அகலத்திற்கு அகற்றும் பணி இந்தாண்டு முடிக்கப்படும்.

வன விலங்குகளை விரட்டும் காவலர்களின் எண்ணிக்கையை தேவையான இடங்களில் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கேரளாவில் உள்ளதை போல காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு விவசாய சங்கங்களை கொண்ட குழு ஒன்று அமைத்து கேரளாவிற்கு சென்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பயிர் மற்றும் மனித உயிரிழப்புகளுக்கு வழங்கும் இழப்பீடு இந்த நிதியாண்டில் தற்போது வரை ரூ.67.7 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் வழங்கப்பட்டதை விட 6 மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post சமவெளி பகுதிகளுக்கு யானைகள் வருவதை தடுக்க 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழிகள் வெட்ட முடிவு appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Asanur Forest Park ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே சிறுத்தை நடமாட்டம்...