×

குளத்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் ரூ.35 லட்சத்துடன் லாக்கரை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

குளத்தூர் : குளத் தூர் அருகே பட்டப்பகலில் லாக்கருடன் ரூ.35 லட்சம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ளது இ.வேலாயுதபுரம் கிராமம். இக்கிராமத்தின் சாலையோரம் ஒரு சமுதாயத்துக்கான திருமண மண்டபம் உள்ளது. இங்கு தனியாக வரவு, செலவு கணக்குகள் பார்க்கும் அறைகளும் உள்ளது. மேலும் இச்சமுதாய வரவு, செலவுகள் அடங்கிய பணப்புழக்கம் இருப்பதால் தனியாக இரும்பு லாக்கரும் உள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலத்தில் கிடைக்கும் பணத்தை சமுதாய நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி விட்டு மீதமுள்ள பணத்தை மண்டபத்தில் உள்ள இரும்பு லாக்கரில் வைத்துவிட்டு அதற்கான 7 சாவிகளை நிர்வாகிகள் வைத்துக் கொள்வர். சமீபத்தில் சீமைகருவேலமரங்கள் மூலம் ஏலத்தில் கிடைத்த ரூ.40 லட்சத்தில் ரூ.5 லட்சம் சமுதாய செலவினங்கள் போக மீதி ரூ.35லட்சத்தை லாக்கரில் வைத்து விட்டுச் சென்றனர். இதையடுத்து சம்பவத்தன்று திருமண நிகழ்விற்காக கிராம மக்கள் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர்.

இதையறிந்த கொள்ளையர்கள் 5 பேர் கடந்த 9ம் தேதி மதியம் 1.15 மணியளவில் சிவப்பு நிற காரில் வந்து கடப்பாரையை பயன்படுத்தி மண்டபத்தின் கதவுகள் மற்றும் லாக்கர் அறையை உடைத்து அதிலிருந்த ரூ.35 லட்சத்தை இரும்பு லாக்கருடன் தூக்கிச் சென்றனர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுக்க முயன்ற போது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சமுதாய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் சமுதாய மக்கள் அனைவரும் சூரங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்த சூரங்குடி போலீசார் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேரை தேடி வருகின்றனர். பணத்தை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் பணம் வைக்கப்பட்டுள்ள இரும்பு லாக்கரைரே தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குளத்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் ரூ.35 லட்சத்துடன் லாக்கரை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Tags : Thieves ,Kulathur ,Kulat Dur ,Dinakaran ,
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா