×

திக்கற்றவனுக்கு திருவரங்கனே துணை

மகாவிஷ்ணு தான் தோன்றி அருளிய எட்டு திருக்கோயில்களில் பெரும் புகழ் பெற்ற முதன்மைக் கோயில் ஸ்ரீரங்கம் ஆகும். பிரம்மனின் கடுந்தவத்தின் பயனால் ஸ்ரீமகாவிஷ்ணு அருளால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும். இதை சுயம்பு என்று கூறுவர். பிரம்மா நித்திய பூசை செய்துவந்தார். ஸ்ரீரங்க (சயன கோல ரங்கநாதர் விக்ரஹம் உள்ளடங்கியது) விமானத்தினுள் ஸ்ரீவைகுண்டமே அடங்கியிருந்தது. பலகாலம் பூஜித்த பிரம்மா, ஸ்ரீரங்க விமானத்தை இந்திரனுக்கு வழங்கினார். இந்திரனும் பலகாலம் பூஜித்து அதை சூரியதேவனுக்கு வழங்கினார். சூரிய தேவனும் பலகாலம் பூஜித்து சூரிய குலமான இஷ்வாகு மன்னனுக்கு அளித்தார்.

இஷ்வாகு மன்னனும் அவரது குலத்தோன்றல்களும், இவ்விமானத்தை பூஜித்து வந்தனர். இக்குலத்தில் தோன்றிய தசரத மன்னனின் புதல்வனான ஸ்ரீராம பிரானும் பூஜித்துவந்தார். ராவணனின் வதம் முடிந்த பிறகு அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த, ஸ்ரீவிபீஷ்ணனுக்கு இவ்விமானத்தை பரிசாக அளித்து பூஜிக்க கூறினார் ஸ்ரீராமர். விபீஷ்ணனும் மிக்க மகிழ்ச்சியோடு இவ்விமானத்தை தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையில் சந்திர புஷ்கரணிக்கருகில் வந்தான்.

அங்கு சிலையை கீழே இறக்கி வைக்கக்கூடாது என்று எண்ணினான். அங்கே ஒரு இடைக்குலச் சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்துவிட்டு கீழே வைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு விபீஷ்ணன் மாலைவேளை சந்தி கடன்களை செய்ய சென்றார். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்துவிட்டான், பின்னர் விபீஷ்ணன் மீண்டும் புறப்பட தயாராகியபோது, சிறுவன் சிலையை கீழே வைத்ததைக் கண்டு, தம்பி, நீ என்ன காரியம் செய்தாய் என்று கூறி விபீஷ்ணன் சிலையை எடுத்தார். எடுக்க முடியவில்லை. அப்போது சிறுவனாக வந்தது, சிலையை கீழே வைத்தது நான்தான் எனக்கூறிவிட்டு தனது ரூபத்தை காட்டிய விநாயகப்பெருமான் அவ்விடம் விட்டு அகன்றார்.

விபீஷ்ணன் மீண்டும் வந்து விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல தூக்க முயன்ற போது, அவரால் அசைக்கமுடியவில்லை. விபீஷ்ணன் மிகவும் மனம் வருந்தி ஸ்ரீரங்கநாதரை வேண்டினார். ரங்கநாதரோ அசரீரியாக ‘‘யாம் காவேரிக் கரையிலேயே தங்க விரும்புவதாக கூறினார். யாம் எப்போதும் உனது இலங்கை நோக்கியே காட்சி தருவோம்’’ என்று கூறினார். அதன்படியே அன்றிலிருந்து ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார்.

அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோயிலை ஒரு கிளியின் உதவியுடன் கண்டுபிடித்ததால் கிளிசோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார். அக்கோயிலை புனரமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோயிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன்.

அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோயிலாக உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் இக்கோயில் “பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர், ராமாயணத்தை இத்தலத்தில்தான் அரங்கேற்றினார்.

5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது.

இந்த கோவிலில் ஸ்ரீராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சைக் கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள். எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள். இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.

மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, அதனைக் காண பல லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருவது என்பது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு அம்சமாகும். இங்கு நடைபெறும் “பகல் பத்து, ராப்பத்து” விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மிகச்சிறந்த சிற்பங்களை கொண்ட இக்கோவில் ஐ .நா. சபையின் “யுனெஸ்கோ” அமைப்பால், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். அவை கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், நவராத்திரி ஊஞ்சல் உற்சவம், அத்யயன உற்சவம், ஸ்ரீரங்கம் பெருமாள் விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் பாரிவேட்டை , ஆதி பிரம்மோற்சவம் விழாவின் போது, வருடத்தில் ஏழு முறை மட்டும், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார்.

சுக்கிர பரிகார தலமாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் வழிபட்டால் துஷ்ட சக்திகள், துரதிருஷ்டங்கள், நோய் நொடிகள், தடைகள் நீங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

அருள்மிகு திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 7.9 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்வதற்கு திருச்சியில் இருந்து ஏராளமான பஸ் வசதி உள்ளது. திருச்சி வழியாக செல்லும் ரயில்களும் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்கின்றன.

தொகுப்பு: மகி

The post திக்கற்றவனுக்கு திருவரங்கனே துணை appeared first on Dinakaran.

Tags : Thiruvarangane ,Thikkaravan ,Lord Vishnu ,Brahman ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா