×

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் கைது: சென்னையில் ஐயப்ப பக்தராக வலம் வந்தவரை தூக்கியது போலீஸ்

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் சென்னையில் கைது செய்தனர். கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த மாதம் 28ம் தேதி நான்கரை கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் விசாரணையில், நகை கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (24) என்பது தெரியவந்தது. இவர் ஆனைமலை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு போலீசார் சென்றபோது, வீட்டின் ஓட்டை பிரித்து விஜயை அவரது மனைவி நர்மதா தப்பி வைத்தார்.

இதையடுத்து நர்மதாவை கைது செய்த போலீசார், வீட்டில் இருந்த 3 கிலோ 200 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயின் மாமியார் யோகராணி வீட்டில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், வீட்டு அருகே மண்ணில் புதைத்து வைத்திருந்த 125 பவுன் தங்க நகைகளை மீட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் விஜய்யின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை நடத்தினர். திடீரென முனிரத்தினம் கம்பைநல்லூர் தேவரெட்டியூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கொள்ளையன் விஜய் தர்மபுரி வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், போலீசார் செல்வதற்குள் அவர் அங்கிருந்து தப்பினார். பின்னர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், விஜயை காளஹஸ்தி சென்று உள்ளார். அங்கு ஐய்யப்பன் கோயிலுக்கு மாலை போட்டு சென்னை சென்று உள்ளார். சென்னையில் ஐயப்ப பக்தர்கள் போல் உலா வந்து உள்ளார். இதை அறிந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து விஜயை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு போலீசார் அழைத்து வந்தனர். விஜய்யிடம் போலீசார் விசாரணை செய்த பின்னரே அவரிடம் மேலும் நகைகள் உள்ளதா? எவ்வளவு நகைகள் உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும்.

* லீசுக்கு வீடு எடுக்க நகைக்கடையில் திருடினேன்: கொள்ளையன் வாக்குமூலம்
கைதான விஜய்யிடம் இருந்து 5 சவரன் நகை, 700 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசில் விஜய் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் திருட்டு வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கும்போது ஆனைமலையை சேர்ந்த சுரேஷ் பழக்கமானார். சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது கோவையில் வீடு ஒன்றை லீசுக்கு எடுத்து குடும்பத்துடன் வசிக்க முடிவு செய்தேன். அதற்காக எனக்கு சில லட்சம் தேவைப்பட்டது. பணம் இல்லாததால் திருடலாம் என நினைத்தேன். இதையடுத்து சம்பவத்தன்று இரவில் நான் காந்திபுரம் வந்து நோட்டமிட்டேன். எந்த கடையில் காவலாளிகள் இல்லை?, எப்படி உள்ளே புகுந்து திருடலாம்? என கண்காணித்தேன். பின்னர் கிராஸ்கட் ரோட்டில் உள்ள நகைக்கடையில் திருட முடிவு செய்து உள்ளே புகுந்து பார்த்தபோது அங்கு பணம் இல்லை. அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினேன். போலீசாரிடம் மாட்டாமல் தப்பித்து விடலாம் என நினைத்தேன். ஆனால் போலீசில் மாட்டி கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் கைது: சென்னையில் ஐயப்ப பக்தராக வலம் வந்தவரை தூக்கியது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Jose Alukas ,Ayyappa ,Chennai ,Coimbatore District Gandhipuram ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்