×

பாஜவுடன் கூட்டணி அறிவிப்புக்கு எதிர்ப்பு மஜத தேசிய தலைவர் பதவியில் இருந்து தேவகவுடா நீக்கம்: போட்டி பொதுக்குழுவில் தீர்மானம்

பெங்களூரு: கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவராக சி.எம்.இப்ராஹிம் இருந்தார். வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் மஜத கூட்டணி அமைத்து போட்டியிட இரு கட்சி தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்து அறிக்கவிட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 24 தொகுதியில் பாஜ மற்றும் 4 தொகுதியில் மஜத கட்சிகள் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜவுடன் இணைந்து மஜத போராட்டம் நடத்தி வருகிறது. இதனிடையில் மக்களவை தேர்தலில் பாஜவுடன் மஜத கூட்டணி அமைத்து இருப்பதற்கு அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த சி.எம்.இப்ராஹிம் உள்பட சிறுபான்மை வகுப்பு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சி.எம்.இப்ராஹிம், தேசிய துணைதலைவர் சி.கே.நாணு உள்பட அவருக்கு ஆதரவாக இருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக மஜத தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா அறிவித்தார். மேலும் மஜத ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கட்சி மாநில தலைவராக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் சி.எம்.இப்ராஹிம் தலைமையில் நடந்த மஜத கூட்டத்தில் அக்கட்சியில் இருந்து தேவகவுடா, குமாரசாமி உள்பட தலைவர்களை நீக்கி விட்டதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் மஜத தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் வரும் மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் தேவகவுடா தலைமையில் நடந்த தேசிய செயற்குழுவுக்கு போட்டியாக நேற்று பெங்களூருவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.எம்.இப்ராஹிம் தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கர்நாடகம் மட்டுமில்லாமல், நாட்டில் சில மாநிலங்களில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து தேவகவுடாவை நீக்கவும், சி.கே.நாணுவை அந்த பதவியில் நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சி.எம்.இப்ராஹிம் தெரிவித்தார். மஜதவில் நிலவும் இரட்டை தலைமை குழப்பம் கட்சி தொண்டர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

The post பாஜவுடன் கூட்டணி அறிவிப்புக்கு எதிர்ப்பு மஜத தேசிய தலைவர் பதவியில் இருந்து தேவகவுடா நீக்கம்: போட்டி பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Deve Gowda ,Majda ,National President ,BJP ,Bengaluru ,CM ,Ibrahim ,Janata Dal party ,Karnataka ,Bharatiya Janata Party ,Lok Sabha elections ,Majda National ,President ,Dinakaran ,
× RELATED பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை