×

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

 

திருவள்ளூர், டிச. 12: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றிவரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமை காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் மாதம் தோறும் ₹3500 மருத்துவப்படி ₹500 என ₹4 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த்திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்படுகிறது. எனவே அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2023-2024ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் பெறுகின்றன. விண்ணப்பிக்க 1.1.2023ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹72,000 மிகாமில் இருக்கவேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெற்ற வருமானச் சான்று இணைக்க வேண்டும்.

தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று 2 தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தினை திருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரடியாக சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகின்ற டிசம்பர் 29ம் தேதி 5.30 மணிக்குள் அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tamil Nadu Government Tamil Development Department ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்