×

சிறுவர்களின் அலைபேசி அழைப்புக்கு செவிமடுத்த தீயணைப்பு துறை: திருப்போரூரில் ருசிகர சம்பவம்

திருப்போரூர்: திருப்போரில் சிறுவர்களின் அலைபேசி அழைப்பை ஏற்று சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்து கிடந்த மாட்டை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். திருப்போரூர் கிழக்கு மாடவீதியில் வசிக்கும் சிலரின் குழந்தைகள் பலரும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலையில் ஒன்றாக தெருவில் கிரிக்கெட் விளையாட வந்தனர். அப்போது, கிழக்கு மாடவீதியை ஒட்டி உள்ள சபாபதி பத்தர் தெருவில் அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அந்த தெருவில் நடுவில் மாடு ஒன்று படுத்துக்கிடந்தது. அதனை எழுப்ப சிறுவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், மாட்டின் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் கிடப்பதை பார்த்து மாட்டை எழுப்பாமல் தங்களால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று முடிவு செய்தனர். சிறுவர்களில் ஒருவன் வீட்டிற்கு சென்று தனது தாயாரின் செல்போனை எடுத்து வந்து அதில் கூகுளில் அவசர உதவி என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துள்ளனர். இதையடுத்து, அதில் வந்த 101 என்ற எண்ணுக்கு பேசி உள்ளனர். தாங்கள் திருப்போரூரில் சபாபதி பத்தர் தெருவில் கிரிக்கெட் விளையாட வந்தபோது மாடு ஒன்று நடக்க முடியாமல் படுத்து கிடப்பதால் அதனை மீட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் திருப்போரூர் தீயணைப்பு அலுவலர் ஆனந்தன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தங்களது வாகனத்துடன் கிழக்கு மாடவீதிக்கு வந்தனர். தீ விபத்து எதுவும் இல்லாத நிலையில் வாகனம் தங்களது பகுதிக்கு வந்ததை பொதுமக்கள் பார்த்து விசாரித்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர் கால் உடைந்து படுத்திருந்த மாட்டை மீட்டு சிகிச்சை அளித்து நடக்க வைத்து அப்புறப்படுத்தினர். பின்னர், அங்கு வேடிக்கை பார்த்த சிறுவர்களிடம் விசாரித்தபோது தாங்கள்தான் போன் செய்து கூறியதாக தெரிவித்தனர். சிறுவர்களின் விழிப்புணர்வை பாராட்டிய தீயணைப்பு அலுவலர் ஆனந்தன் இதுபோன்று எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், முதலில் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மற்ற சிக்கலான பாதுகாப்பற்ற நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறுவர்களுக்கு விளக்கி கூறி விடை பெற்றனர். சிறுவர்களின் தொலைபேசி அழைப்பையும் மதித்து சம்பவ இடத்திற்கு உடனே வந்த தீயணைப்பு படையினரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

 

The post சிறுவர்களின் அலைபேசி அழைப்புக்கு செவிமடுத்த தீயணைப்பு துறை: திருப்போரூரில் ருசிகர சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Fire ,Thirupporur ,Tirupporur ,Tiruppor ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு