×

அயோத்தி ராமர் கோயிலுக்கு 44 பிரமாண்ட மரக்கதவுகள் செய்யும் பணி: சிற்ப கலைஞர்கள் தீவிரம்

மாமல்லபுரம்: அயோத்தி ராமர் கோயிலுக்கு தேக்கு மரத்தில் 44 பிரமாண்ட கதவுகளை செய்யும் பணியில் மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், 1600 சிற்ப கலைஞர்கள் மூலம் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து, 350க்கும் மேற்பட்ட தூண்கள் மூலம் ராமர், சீதைக்கு கருவறைகள் அமைக்கப்படுகிறது. உலக அளவில் உள்ள இந்து மக்கள் உள்ளிட்ட பலரும் வியந்து பார்க்கும் வகையில், அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த உத்திரபிரதேச அரசு தயாராகி வருகிறது.

இந்நிலையில், கோயிலின் நுழைவாயில், முன் மண்டபம், பக்கவாட்டு மண்டம், வெளியே வரும் வழி, ராமர் – சீதை கருவறைகள், லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட 44 வாசல்களுக்கு, 44 தேக்கு மரக்கதவுகளை மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் படித்த கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை மர சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக வடிவமைத்து வருகின்றனர். அதில், இரண்டு யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும், கழுகுகள் பறப்பது போலும் பல்வேறு வடிவமைப்புகளுடன் கதவுகள் வடிமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய தேக்கு மரங்களை கொண்டே இப்பணிகள் நடந்து வருகிறது. தற்போது, செய்து முடிக்கப்பட்ட மரக்கதவுகளை அயோத்தி ராமர் கோயிலில் மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தலைமையில், சக மரச்சிற்பக்கலைஞர்கள் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post அயோத்தி ராமர் கோயிலுக்கு 44 பிரமாண்ட மரக்கதவுகள் செய்யும் பணி: சிற்ப கலைஞர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ayodhya Ram Temple ,Mamallapuram ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்