×

மன அழுத்தத்தைத் தடுக்கும் கொத்தமல்லிக் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

அன்றாட உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தும் பசுமையான கீரைகளில் ஒன்று கொத்தமல்லி கீரை. இந்த கீரையில் உள்ள வெள்ளை நிற பூக்கள், மஞ்சரியுடன் இணைந்து காணப்படும் அமைப்பின் அடிப்படையில் கொத்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. அதன் இலைப் பகுதிகளே கொத்தமல்லி கீரையாக பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி கீரையின் விதைகளே தனியாவாக பயன்படுத்துகிறோம். இந்த தனியா தனிகம், உரி, உருளரிசி, தேனிகை, தானியகம் மற்றும் உத்தம்பரி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

இது ஒருவகையான குறுஞ்செடி, நறுமணம் மிக்கது. மேலும், இதற்கு மருத்துவ குணங்களும் ஏராளமாக உண்டு. அதனால், இது மூலிகைச் செடியாகவும் பார்க்கப்படுகிறது. கொத்தமல்லி செடியை சிறு தொட்டிகள் மூலமும் வளர்க்க முடியும். இவை சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் பிளவுகள் கொண்டவை. இதன் இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கொத்தமல்லி ஐரோப்பாவை தாயகமாக கொண்டது. இது மேற்கு ஆசியா. தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே காடுகளில் காணப்படுகின்றன. மேலும், சீனா, இந்தியா, ரஷ்யா. வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில்தான் கொத்தமல்லி கீரையை வர்த்தக நோக்கில் அதிகளவு வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

கொத்துமல்லியின் தாவரவியல் பெயர் கோரியாண்டர் சட்டைவம், இது அபியேசியே என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதில், பிளேவனாய்டுகள் டெரிபினாய்டுகள், கிளைக்கோனாய்டுகள் மற்றும் குளுக்கோனாய்டுகள் நிறைந்து காணப்பிடுகின்றன. மேலும் இதில் லினானூல், ஜெரானிலால், காம்பர், ரூட்டின், குமாரின், பைட்டோஸ்டிரால், அல்கார்பிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருட்கள் கொத்துமல்லியில் காணப்படுகின்றன.

கொத்துமல்லியில் காணப்படும் சத்துகள்

கொத்துமல்லிக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மாங்கனிஸ், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுகளும் நிறைந்து காணப்படுகின்றன.

கொத்துமல்லியின் மருத்துவ பண்புகள்

கொத்துமல்லியில் இருக்கும் வைட்டமின் ஏவின் காரணமாக கண்பார்வையை மேம்படுத்த இக்கீரை உதவுகிறது. கொத்தமல்லி கீரையில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்டிராலை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. இதில் நிறைந்திருக்கும் தாதுக்களின் காரணமாக எலும்புகள் மற்றும் நரம்புகள் வலுவடைகின்றன.

கொத்துமல்லிக்கீரையில் நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதினால் வயிற்றுப் புண், செரிமானப் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது. இதில் உள்ளடங்கிய லினாலூல் என்ற வேதிபொருளுக்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும் பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் ஏ, ஈ போன்ற சத்துகள் கொத்தமல்லி கீரையில் நிறைந்திருப்பதால் சரும நோய்களுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன.

நச்சுக்கள் வெளியேற்றம்

கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

எடை இழப்பை அதிகரிக்கிறது

கொத்தமல்லியில் மகத்தான செரிமான பண்புகள் உள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் அதிக எடையை குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சி

கொத்தமல்லியில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் தலைமுடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது முடி உதிர்வை எதிர்த்துப் போராட உதவும். இத்தகைய நன்மைகளைக் கொண்ட கொத்தமல்லி கீரையை அன்றாட உணவு வகைகளிலும் துவையல், சட்னி, ஜூஸ் என ஏதோ ஒரு வகையில், உட்கொள்வது நலம் தரும். கொத்தமல்லி கீரையின் பயன்களைப்பற்றி பதார்த்த குணபாடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொத்துமல்லிக் கீரையின் குணம்

கொத்துமல்லிக் கீரையுண்ணிற் கோரவ ரோசகம் போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண் சத்துவமாம் வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங் கச்சுமுலை மாதேநீ காண்.

The post மன அழுத்தத்தைத் தடுக்கும் கொத்தமல்லிக் கீரை! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,R. ,Sharmila ,Dinakaran ,
× RELATED சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!