×

கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்: ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் போலீஸ், தேவசம் போர்டு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் நேற்று பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. வெள்ளி சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் தினசரி சராசரியாக 1 லட்சத்திற்கு அதிகமான பக்தர்களும், வார நாட்களில் 70 ஆயிரத்திற்கு அதிகமான பக்தர்களும் தரிசனத்திற்காக வருகின்றனர். ஆனால் போதிய வசதிகள் செய்யப்படாததாலும், பக்தர்களை கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசாரும் ஆர்வம் காட்டாததாலும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த வருடம் வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கேரள போலீசிடம் இருந்தது. இந்த வருடம் முதல் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இது போலீசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முதல்முறையாக கையாளுவதால் தொடக்கத்திலேயே பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. முன்பதிவு செய்ய முடியாமல் பல நாட்கள் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
கடந்த வருடம் வரை பல நாட்கள், தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தபோதிலும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. நடை சாத்தப்பட்டிருக்கும் நேரங்களில் 18ம் படி ஏற போலீசார் அனுமதி அளித்தனர். தற்போது நடை சாத்தப்பட்டுள்ள சமயங்களில் 18ம் படி ஏற அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தினமும் 6 முதல் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வசதி கூட தேவசம் போர்டு செய்து கொடுக்கவில்லை. இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த குழந்தைகள் உள்பட பக்தர்கள் மயக்கமடைந்தனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சமீபத்தில் வரிசை வளாகங்கள் திறக்கப்பட்டன. இங்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்திருந்தது. ஆனால் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அறிந்த கேரள உயர்நீதிமன்றம், பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்து தர வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டருக்கும், கேரள டிஜிபிக்கும் உத்தரவிட்டது. மேலும் தரிசன நேரத்தை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனால் நேற்று முதல் ஒன்றரை மணி நேரம் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்தனர். இந்த 3 நாட்களிலும் தொடர்ந்து 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனர்.

ஆனால் முறையாக எந்த வசதியும் செய்யப்படாததால் 16 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். இன்று காலையிலும் தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர். சபரிமலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டும், போலீசும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

The post கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்: ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் போலீஸ், தேவசம் போர்டு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Devasam Board ,Thiruvananthapuram ,Sabarimala… ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு