×

2015ஐ விட தற்போது அதிக மழை பெய்ததாக கூறும் புள்ளி விவரங்கள்: அரசு எடுத்த முன்னெச்சரிக்கைகளால் வெகுவாக குறைந்த பாதிப்புகள்

சென்னை: மிக்ஜாம் புயலின் பாதிப்பை 2015 பெரு வெள்ளத்துடன் ஒப்பிட்டு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் புள்ளி விவரங்கள் மூலம் சென்னையில் 2015ம் ஆண்டைவிட தற்போது பெய்துள்ள மழை மிக மிக அதிகம் என்பதும் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதும் தெரிவியவந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புகள் தொடங்கிய நாள் முதலே 2015ம் ஆண்டு முதல் பெய்த பெருமழையை தற்போதைய மழையுடன் பலரும் ஓப்பிடுகின்றனர்.

ஆனால் 2015ம் ஆண்டை போல் அல்லாமல் கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் பெய்த மழை என்பது சென்னை முழுவதும் கொட்டி தீர்த்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சென்னையில் மொத்தமுள்ள 43 மழை பதிவு மையங்களில் தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையாறு,ஆவடி, பூந்தமல்லி உட்பட 17 இடங்களில் ஒரே நாளில் சராசரியாக 20 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. 2015ம் ஆண்டில் பெருவெள்ளம் ஏற்பட்ட டிசம்பர் 1முதல் 3ம் தேதி வரையிலான 3 நாட்களில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 35 செ.மீ மழையும் அதே காலகட்டத்தில் மீனம்பாக்கத்தில் 44செ.மீ மழையும் பெய்துள்ளது.

ஆனால் நடப்பு ஆண்டில் நுங்கம்பாக்கத்தில் 53செ.மீ, மீனம்பாக்கத்தில் 52செ.மீ மழையும் கொட்டி தீர்த்தது. 2015ம் ஆண்டு பெருமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் சரியான திட்டமிடுதல் இல்லாததே சென்னை நகரம் தண்ணீரில் மூழ்க காரணமானது என கூறும் நிபுணர்கள் ஆனால் நடப்பு ஆண்டு ஏரி நீர்த்தேக்கத்தை அரசு முறையாக கணக்கிட்டுள்ளதாக கூறுகின்றனர். அதாவது 2015ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்படவே இல்லை இதனால் டிசம்பர் 2ம் தேதி கனமழை பெய்ததும் இரவோடு இரவாக முன்னறிவிப்பின்றி ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதோடு தொடர்மழையும் சேர்ந்ததால் சேதம் அதிகமாகி இருந்தது.

நடப்பாண்டு நவம்பர் மாத இறுதி முதலே அரசு ஏரியை கண்காணித்து வந்ததுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடனே உபரி நீர் திறக்கப்பட்டு டிசம்பர் 3ம் தேதி நிலவரப்படி ஏரியில் 75%தண்ணீர் மட்டுமே தேக்கிவைக்கப்பட்டிருந்தது. எனவே புயலின் போது ஏரிக்கு அதிகப்படியான நீர் வந்த போதும் பெருமளவில் தண்ணீரை வெளியேற்றாமல் அதனை அரசால் சமாளிக்க முடிந்தது. ஏரியிலிருந்து நீர்திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை மட்டுமின்றி புயல் தொடர்பான கணிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களும் இந்த முறை மிகவும் துல்லியமாக அளிக்கப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் புயலுக்கு முன்பே தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், ஆற்றங்கரையிலுள்ள பெரும்பாலானோர் புயலுக்கு முன்பே பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இடைவிடாது மழை கொட்டி தீரத்துடன் கடல்சீற்றம் காரணமாக மழைநீர் மற்றும் ஆற்று வெள்ளம் கடலுக்குள் கலப்பதும் தாமதமானது.

குறைவான நேரத்தில் எதிர்பார்த்ததை விட 2 மடங்கு மழை கொட்டி தீர்த்தும் சென்னை நகரம் வெள்ளக்காடாக மாறியதற்கு காரணமானது.ஆனால் மழை நின்ற சில மணி நேரத்தில் நகரங்களின் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் மழை நீர் வேகமாக வடிய துவங்கியது. சென்னை முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளில் இதனை சாத்தியப்படுத்தி உள்ளதாக நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் பாடம் கற்று கொண்டு மீண்டும்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post 2015ஐ விட தற்போது அதிக மழை பெய்ததாக கூறும் புள்ளி விவரங்கள்: அரசு எடுத்த முன்னெச்சரிக்கைகளால் வெகுவாக குறைந்த பாதிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mikjam storm ,2015 ,Peru ,Dinakaran ,
× RELATED குப்பை கழிவுகளை வீசுவதை தடுக்க...