×

ஏசி இல்லாத வந்தே பாரத் ரயிலுக்கு அம்ருத் பாரத் என பெயர் வைக்க திட்டம்

சென்னை: ஏசி இல்லாத வந்தே பாரத் ரயிலுக்கு ‘அம்ருத் பாரத்’ என பெயர் வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. முழுவதும் ஏ.சி.யில் சொகுசு மற்றும் விரைவு பயணம் என்பதால் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தெற்கு ரயில்வேயில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு, சென்னை-விஜயவாடா, சென்னை-திருநெல்வேலி. திருவனந்தபுரம்-காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் போன்று ஏ.சி. இல்லாமல் குறைந்த கட்டணத்தில் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை ஐ.சி.எப்.பில் வந்தே பாரத் ரயிலில் சில மாற்றங்களை செய்து ஆரஞ்சு நிறத்தில் 22 பெட்டிகளுடன் ரயில் உருவாக்கப்படுகிறது. முன்னும் பின்னும் 2 முனைகளிலும் இன்ஜின்களுடன் இவை தயாரிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இந்த 2 இன்ஜின்கள் இயங்குவதால் மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். ஐ.சி.எப்.பில் தயாரான இந்த முதல் ரயில் ஏற்கனவே மேற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இது மும்பை-அகமதாபாத் இடையே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஐ.சி.எப்.பில் 2வது ரயில் தயாராகி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரயில் வடகிழக்கு அல்லது வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ரயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எனினும் வந்தே பாரத் ரயில் போன்று உள்ள இந்த ரயிலுக்கு அம்ருத் பாரத் என்று வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும், எதிலும் குளிர்சாதன வசதி இருக்காது. முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இருக்கும். தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் ரயிலின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் குளிர்சாதன வசதி இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த ரயிலில் முன்னும் பின்னும் இன்ஜின் இருக்கும். இதில் 12 தூங்கும் வசதியுடன் 2ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக்கும். இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post ஏசி இல்லாத வந்தே பாரத் ரயிலுக்கு அம்ருத் பாரத் என பெயர் வைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Amrut Bharat ,CHENNAI ,Vande… ,Dinakaran ,
× RELATED சென்னை-திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்: 2 மாதங்களில் சோதனை