×

மெப்டால் போன்றவை கடுமையான பக்கவிளைவு ஏற்படுத்தும் சிறுநீரகம், கல்லீரலை பாதிக்கும் வலி நிவாரணி மாத்திரைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: வலி நிவாரணியான மெப்டல் மாத்திரையை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில், வலி நிவாரணியாகவே இருந்தாலும் அவற்றை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது, நிச்சயம் அது கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை சமாளிக்கவும், முடக்குவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் வலி நிவாரணியாக மெப்டல் என்னும் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர். மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எளிதாக கிடைத்துவிடும் இந்த மாத்திரை சில மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த மாத்திரையை அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரைகளை உட்கொண்ட 2 முதல் எட்டு வாரங்களுக்குப் பின் தோன்றும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலி ஏற்படும்போது தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதற்காக மெப்டால் மாத்திரை மெப்டால் வலி நிவாரணி மாத்திரையில் மெபெனாமிக் அமிலம் உள்ளது. இது முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி, மாதவிடாய் வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள், மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடாது. பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் ஆலோசனையை கேட்டுக்கொள்வது நல்லது.

மெப்டால் மட்டும் அல்ல: மெப்டால், பாராசிட்டமல், இப்யூபுரூபன் போன்ற ஸ்டீராய்டு அல்லாத வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதால் சந்திக்கும் ஒரு பொதுவான பக்க விளைவு தான் வயிற்று உப்புசம். ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுக்கும் போது, அவை வயிற்று சுவரை எரிச்சலடையச் செய்து, அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றையும் உண்டாக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுக்கும் போது, அது சிறுநீரகங்களுக்கு அதிகப்படியான வேலையைக் கொடுத்து, விரைவில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மோசமாக்கி பல பிரச்னைகளை கொண்டு வரும். சில சமயங்களில் இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை குறைக்கும். தீவிரமான நிலையில் இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். அசெட்டமினோபென் என்னும் பொருள் பாராசிட்டமல் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளில் காணப்படுகிறது. இந்த வலி நிவாரணி மாத்திரையை அதிகமாக எடுக்கும் போது, அது கல்லீரலை மோசமாக சேதப்படுத்தும். அத்துடன் மது அருந்தும் போது, கல்லீரல் இன்னும் தீவிரமாக பாதிக்கப்படும். ஓபியாய்டுகள் மருந்துகள் நிறைந்த வலி நிவாரணி மருந்துகளை அதிகம் எடுக்கும் போது, அது மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மற்றும் அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பிற அறிகுறிகள்
l மலச்சிக்கல்
l குமட்டல் மற்றும் வாந்தி
l தலைவலி
l சரும அரிப்பு
l உயர் ரத்த அழுத்தம்
l சுவாசிப்பதில் சிரமம்
இதுகுறித்து சென்னை அரசு
கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் மீனா கூறியதாவது: மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு அதிக அளவிலான வலி இருக்கும். அந்த நேரத்தில் ஓய்வு முக்கியம். ஆனால், அவர்கள் இருக்கும் சூழலால் ஓய்வு எடுக்க முடியாத நிலை இருக்கும். அதுவும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது முடியாத ஒன்று. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மெப்டால் மாத்திரை பெண்களுக்கு தவிர்க்கமுடியாதது. அதிக வலியின்போது இந்த மாத்திரைதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தலாம். அதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது.

மருந்தாகவே இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அது தீங்கை தான் உண்டாக்கும். அதுவும் வலி நிவாரண மாத்திரைகள், வலியில் இருந்து உடனடி நிவாரணத்தை அளித்தாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது, நிச்சயம் கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தும். எனவே எப்போதும் எந்த ஒரு மாத்திரையை எடுப்பதாக இருந்தாலும், அதன் பக்கவிளைவுகளை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதுவும் இந்த வகையான மருந்துகளை அழற்சிகளை ஏற்படுத்துவதோடு, செரிமான மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புக்களை பாதிக்கலாம். வலி நிவாரணி மாத்திரைகளால் சந்திக்கும் பக்கவிளைவுகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இருப்பினும் எந்த ஒரு வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் அறிவுரையின் பேரில் மட்டுமே எடுக்க வேண்டும். இப்படி செய்தால் அந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்கலாம்’’ என்றார்.

 

The post மெப்டால் போன்றவை கடுமையான பக்கவிளைவு ஏற்படுத்தும் சிறுநீரகம், கல்லீரலை பாதிக்கும் வலி நிவாரணி மாத்திரைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pharmaceuticals Authority of India ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...