×

டர்பனில் முதல் டி20 போட்டி தென் ஆப்ரிக்கா – இந்தியா இன்று பலப்பரீட்சை: இரவு 7.30க்கு தொடக்கம்

டர்பன்: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. டி20 போட்டிகள் டிச.10, 12, 14 தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிச.17, 19, 21 தேதிகளிலும் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் டிச.26ம் தேதி செஞ்சுரியனிலும் (பாக்சிங் டே டெஸ்ட்), 2வது டெஸ்ட் ஜன.3ம் தேதி கேப் டவுனிலும் தொடங்குகின்றன. டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கு தனித்தனி அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 தொடரில் சூரியகுமார் தலைமையிலான இளம் அணி களமிறங்குகிறது. ரோகித், கோஹ்லி, ராகுல், ஷமி, ஹர்திக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ், ஜெய்ஸ்வால், ருதுராஜ், பிஷ்னோய், ரிங்கு சிங், திலக் வர்மா ஆகியோருடன் ஜடேஜா, சிராஜ், சுந்தர், கில் என அனுபவ வீரர்கள் இருப்பது கூடுதல் பலம். தென் ஆப்ரிக்காவும் 3 தொடர்களுக்கு தனித்தனி அணிகளை அறிவித்துள்ளது. டி20ல் மார்க்ரம் தலைமையில் களமிறங்க உள்ள தென் ஆப்ரிக்க அணியில் மில்லர், ஹெண்ட்ரிக்ஸ், யான்சன், என்ஜிடி, கோட்ஸீ ஆகியோருடன் இளம்/ புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பைக்கு தயராகும் வகையிலான இத்தொடரில் வெற்றியை குவிக்க, இரு அணிகளுமே வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* தென் ஆப்ரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), பிரீட்ஸ்கே, டோனோவன் பெரேரா, கிளாஸன், டிரைஸ்டன் ஸ்டப்ஸ், ஹெண்ட்ரிக்ஸ், மில்லர், யான்சென், பெலுக்வாயோ, பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, கேஷவ் மகராஜ், லுங்கி என்ஜிடி, லிசார்டு வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.

* இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்கள்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

* இரு அணிகளுக்கும் இடையே 2015/16ல் தொடங்கி இதுவரை 5 டி20 தொடர்கள் நடந்துள்ளன.

* 2 தொடர்களை இந்தியா கைப்பற்றி உள்ளது. தென் ஆப்ரிக்கா ஒரு தொடரை வசப்படுத்தி உள்ளது (2 தொடர்கள் டிரா).

* இந்த 5 தொடர்களில் 4 தொடர்கள் இந்தியாவிலும், ஒரு தொடர் தென் ஆப்ரிக்காவிலும் நடந்துள்ளன. அங்கு நடந்த தொடரை இந்தியாவே கைப்பற்றியது.

* இரு அணிகளும் மோதிய 24 டி20ல் இந்தியா 13-10 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் ரத்து).

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன (ஒரு ஆட்டம் ரத்து).

The post டர்பனில் முதல் டி20 போட்டி தென் ஆப்ரிக்கா – இந்தியா இன்று பலப்பரீட்சை: இரவு 7.30க்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 1st T20I ,Durban ,South Africa ,India ,T20 ,Kingsmead Stadium, ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...