×

தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1974ம் ஆண்டில், அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள், சுயநிதி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் ஆகியவற்றுக்கான தொடக்க அங்கீகாரம் 1 முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரங்கள் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு பிறகு அந்த அங்கீகாரங்களை இந்த இரண்டு துறைகளின் அதிகாரிகளே புதுப்பித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை பிறப்பித்த உத்தரவின் மூலம் மேற்கண்ட பள்ளிகள் உறுதியான கட்டிடங்களில், போதிய மாணவர்களுடன்,  தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டு வந்தால், அவற்றுக்கான தற்காலிக அங்கீகாரத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த பள்ளிகள் உரிய துறைகளின் அதிகாரிகளிடம் இருந்து கட்டிட உறுதிச் சான்றை ஒவ்வொரு 3 ஆண்டுக்கு பிறகும் வாங்கித் தர வேண்டும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டது. அப்படி மேற்கண்ட சான்றை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் பள்ளியின் நிரந்தர அங்கீகாரத்தை கல்வித்துறை அதிகாரிகள் ரத்து செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு பிறகு மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதன் பேரில் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவனம் அதிகரித்தது. அதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு விதிகளையும், கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. மேலும், தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட பஸ் விபத்துக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டில் தனியார் பள்ளி வாகனங்களுக்காக தனி விதிகளையும் அரசு கொண்டு வந்தது. அதற்கு அடுத்தபடியாக தனியார் பள்ளி ஒன்றில் இருந்த நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2015ம் ஆண்டில் ஒரு ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு விதிகளையும் அரசு கொண்டு  வந்தது. இதற்கு பிறகு மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளிகளின் தாளாளர்கள், மற்றும் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் கடந்த 1994ம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட அரசாணை 752ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அந்த வழக்கில் கேட்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் இறுதியில், மனுதாரர் கேட்டுள்ளபடி நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியின் கவனக் குறைவால் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்தனர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அந்த சம்பவத்துக்கு பிறகு தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த விஷயத்தில் புதிய உத்தரவுகள் வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது. கடந்த 1994ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே நிரந்தர அங்கீகாரம் பெற்றுள்ள மற்றும் 3 ஆண்டுகள் வரை அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் அரசாணை 122ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, பள்ளிகளின் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றுகளை உரிய காலத்தில் புதுப்பிக்கவும் வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரின் கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, கீழ் கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது: நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த 1994ம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட அரசாணை எண் 752, திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 3 ஆண்டுகள் அல்லது கட்டிட உறுதிச் சான்றில் தெரிவிக்கப்பட்டுள்ள காலம் அல்லது கட்டிட உரிமைச் சான்று இவற்றில் எது முந்தையதோ அதன்படி வழங்கலாம். அவை உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். மேற்கண்ட அரசாணை 752ன்படி நிரந்தர அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகள் தங்களின் சான்றுகளை சம்பந்தப்பட்ட துறைக்கு காட்டவோ அல்லது சமர்ப்பிக்கவோ வேண்டும். தவறும் பட்சத்தில் நிரந்தர அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அரசாணையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 3 ஆண்டுகள் அல்லது கட்டிட உறுதிச் சான்றில் தெரிவிக்கப்பட்டுள்ள காலம் அல்லது கட்டிட உரிமைச் சான்று இவற்றில் எது முந்தையதோ அதன்படி வழங்கலாம். அவை உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும்….

The post தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary of School Education ,Kakarla Usha ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...