×

எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்த வழக்கு: தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்து வந்தது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சில பகுதிகளில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து காணப்படுகிறது. வடசென்னை மணலி பகுதியில் தேங்கி கிடந்த மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. இந்நிலையில் ஊட்டி ஏரியில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக விசாரணையிலிருந்து குறுக்கிட்டு சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதை தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

நேற்றைய தினம் நடந்த வழக்கில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் ஏற்பட்ட பாதிப்பை குறித்த செய்திகளை சுட்டிகாட்டி தீர்ப்பாயத்தின் ஏ பிரிவு உறுப்பினர் உஷா நாராயணா, நிபுணர்த்துவ உறுப்பினர் சத்திய கோபாலன் அமர்வு கேள்வி எழுப்பியது. அப்போது சென்னை பெட்ரோலியம் கார்போரேஷன் மற்றும் இந்தியன் ஆயில் கார்போரேஷன் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் சலீம், வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதா என்பதை விசாரித்தும் , இதற்கு என்ன தீர்வு, இதை அகற்றுவதற்கான என்ன நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை சம்மந்தப்பட்ட ஆயில் நிறுவனத்திடம் கேட்டு பெற்று தருவதாக தெரிவித்திருந்தார். மேலும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்மந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இந்த வழக்கின் விசாரணை இன்று தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்திய நாராயணன், உறுப்பினர் சத்திய கோபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வழக்கறிஞர் கூறுகையில், எண்ணெய் கழிவு தெரிந்தே கலக்கப்படவில்லை ,வேண்டும் என்றே மழை வெள்ள நீரில் கலந்து விட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் கூறியதாவது, மணலி தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்பு பகுதிகளிள் எண்ணெய் படிவம் காணப்படுகிறது. ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் எவ்வாறு கூற முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

பெட்ரோல் கெமிக்கல் நிறுவனங்களில் கசிவு ஏற்பட்டு தரை பகுதிகளில் எண்ணெய் கலந்து விட்டது என்று கூறுவது உண்மையெனில் இப்படி நடப்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா? என எண்ணெய் நிறுவனங்களுக்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. மேலும் உண்மை நிலையை அறிய தமிழ்நாடு அரசு ஏன்? நிபுணர் குழுவை அமைக்கவில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகம் என்ன செய்கின்றனர் என்ற கேள்வியும் தீர்ப்பாயம் கேள்வி முன்வைத்தது. மேலும் நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோ மீட்டர் அளவிற்கு பெரிய அளவிலே எண்ணெய் கழிவுகள் காணப்படுவதாக தெரிவிக்கிறது என்றும் 5 கிலோ மீட்டர் என்னை கழிவுகள் டிரேஷஸ் ஆஃப் ஆயில் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறை முடியும் என்றும் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

அப்போது CPCL தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மழைநீரில் எண்ணெய் கலப்பதை தடுக்கவும் தேங்கியிருந்த எண்ணெய் கழிவுகளை சேகரிக்கவும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மத்திய சுற்று சூழல் வாரிய வழக்கறிஞர், எண்ணெய் நிறுவன குழாயில் கசிவு ஏற்பட்டிருந்தால் உடனடியாக தெரிய வந்திருக்கும் என்றும் அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் அரசு மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது சுற்றுச்சூழல்துறை செயலாளர், மாசுக் கட்டுப்பாடு வாரியம், நீர்வளத்துறை, சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து திங்கட்கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய் கிழமை தீர்ப்பாயத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

The post எர்ணாவூரில் மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்த வழக்கு: தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ernavur ,Tamil Nadu Government ,Chennai ,Ernavur, Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்