×

திருச்சுழி அருகே கல்லூரணியில் 700 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டெடுப்பு

திருச்சுழி, டிச.9: திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருச்சுழி அருகே உள்ள கல்லூரணியில் பழமையான சிலை இருப்பதாக அவ்வூரை சேர்ந்த செல்வகணேஷ் மற்றும் தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர் ஜோஸ்வா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான தர், முனைவர் தாமரைக்கண்ணன் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அச்சிலையானது 700 வருடங்களுக்கு முற்பட்ட திருமால் சிற்பம் என தெரியவந்தது.

அவர்கள் கூறுகையில், கல்லூரணியில் காணப்படும் திருமால் சிற்பத்தை ஊரின் மேற்கு புறத்தில் உள்ள ஊருணி கரையில் ஒரு பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த சிலையானது வெளிப்புறத்தில் மூன்றடி அளவு தெரியும் விதமாக காணப்படுகிறது. தலைப்பகுதி கிரீடமகுடமும், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரி நூலும் இடம்பெற்றுள்ளது. இடையில் இடைக்கச்சை அணிந்துள்ளபடி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் நான்கு கரங்கள் இடம்பெற்றுள்ளது. வலது மேற்கரத்தில் சுதர்சன சக்கரமும், இடது மேற்கரத்தில் சங்கும், வலது முன் கரத்தில் அபயம் காட்டியும், இடது முன் கரத்தை தொடை மீது வைத்தும் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இவ்ஊரில் இது போன்ற வரலாற்றுத் தடயங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை வைத்து இவ்வூரின் பழமையை நாம் அறியலாம். மேலும் சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து பிற்கா, பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம் என்றனர்.

The post திருச்சுழி அருகே கல்லூரணியில் 700 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumal ,Kallurani ,Thiruchuzhi ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...