×

சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் 3 அடுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: அரசு அறிவிப்பு; வீடுகள் விலை உயர வாய்ப்பு

சென்னை: சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவின் போது ஒரு பகுதிக்கு ஒரே மாதிரியான வழிகாட்டி மதிப்பும், வீடுகளின் தரத்திற்கு ஏற்ப 3 அடுக்காக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் வீடுகள் விலை உயர வாய்ப்புள்ளதாக கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை நகர் மற்றும் புறநகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரே வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இந்த புதிய மதிப்பு பேசிக், பிரீமியம் மற்றும் அல்ட்ரா பிரீமியம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உதரணமாக மயிலாப்பூரில் உட்புற சாலைகளுக்கு ரூ.9000 என்றும் ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்கு ரூ.13000 என்றும் வழிகாட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உள்ள புதிய அறிவிப்பின்படி, மயிலாப்பூரில் பேசிக், பிரீமியம் மற்றும் அல்ட்ரா பிரீமியம் வீடுகளுக்கு ஒரு சதுரடிக்கு ரூ.16,000, ரூ.18,000 மற்றும் ரூ.22,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் இந்த மூன்று வகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சதுர அடிக்கு முறையே ரூ.6500, ரூ.8200 மற்றும் ரூ.10500 ஆகவும், தாம்பரம் பகுதியில் ரூ.5,500, ரூ.6,000 மற்றும் ரூ.6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2012ம் ஆண்டுக்கு பின் வழிகாட்டி மதிப்புகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த புதிய மதிப்பும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும், தனி வீடுகள், மனைகளுக்கு பொருந்தாது. இதில் பேசிக் என்பது சாதாரணமான அடுக்குமாடி குடியிருப்புகள், பிரீமியம் வகை வீடுகள் என்பது நீச்சல் குளம் மற்றும் கிளப்ஹவுஸுடன் இருக்கும் வீடுகளாகும், மேலும், அல்ட்ரா பிரீமியம் என்பது அதை காட்டிலும் கூடுதல் வசதிகளைக் கொண்ட வீடுகளாகும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கட்டுமானத்துறையினர் கூறியதாவது: ஒவ்வொரு தெருவிற்கும் விற்பனை விலை வேறு வேறாகவே இருக்கும் போது ஒரே வழிகாட்டு மதிப்பு சரியாக இருக்காது. கோயம்பேடு, அம்பத்தூர் மற்றும் முகப்பேர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. இது புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவது குறையும். இது சென்னையின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, அரசு இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இது குறித்து நாங்கள் தமிழ்நாடு அரசிடம் முறையிட உள்ளோம் என்றனர்.

The post சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் 3 அடுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: அரசு அறிவிப்பு; வீடுகள் விலை உயர வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,SUBURBAN APARTMENT ,Chennai Suburbs ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...