×

ஒடிசா மதுபான நிறுவன ஐ.டி. ரெய்டில் 156 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்: 3 நாட்களில் ரூ.220 கோடி பறிமுதல்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மதுபான நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் 156 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒடிசாவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல பால்டியோ சாஹு குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பல்பூர், போலாங்கிர், தில்தில்கர்க், பௌத், சுந்தர்கர்க், ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் பகுதிகளில் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகிறது.

மேலும், புவனேஸ்வரில் பாலசாபள்ளியில் உள்ளள பவுத் மதுபான நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.200 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது நாளான நேற்று நடத்திய சோதனையில், பீரோக்கள் மற்றும் 156 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 6 அல்லது 7 மூட்டைகளை பிரித்து எண்ணியதில் ரூ.20 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் வருமான வரித்துறையினர் இதுவரை பறிமுதல் செய்த தொகை ரூ.220 கோடியாக அதிகரித்துள்ளது.

* மோடியின் உத்தரவாதம்
பிரதமர் மோடி இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “மக்கள் கட்டுக்கட்டாக உள்ள இந்த பணத்தை பார்க்க வேண்டும். இது குறித்து நேர்மையான அவர்கள் அளிக்கும் விளக்கங்களை கேட்க வேண்டும். எதுவாக இருந்தாலும், மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின், ஒவ்வொரு பைசாவும் மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட வேண்டும். இது மோடியின் உத்தரவாதம்,” என்று கூறியிருப்பதுடன், இந்தி நாளிதழில் வெளியான வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போட்டோவை இணைத்துள்ளார்.

* ஜார்கண்ட் எம்பி.தொடர்பு?
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மதுபான குழும நிறுவனத்துடன் ஜார்கண்ட் காங்கிரஸ் எம்பி. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவரது மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் அவர் அங்கு இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post ஒடிசா மதுபான நிறுவன ஐ.டி. ரெய்டில் 156 மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்: 3 நாட்களில் ரூ.220 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Odisha Liquor Company ,Bhubaneswar ,Odisha ,Odisha… ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...