×

கனடாவில் இந்தி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டருக்குள் ரசாயன ‘ஸ்பிரே’ தெளிப்பு: பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறல்

டொராண்டோ: கனடாவில் இந்தி திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டருக்குள் மர்ம நபர்கள் ரசாயன ‘ஸ்பிரே’ தெளித்ததால் பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கனடா நாட்டின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அப்பகுதியில் செயல்படும் மூன்று வெவ்வேறு தியேட்டர்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்தனர். அந்த தியேட்டர்களில் இந்தி திரைப்படங்கள் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. திடீரென அவர்கள் ரசாயனம் ஒன்றை ‘ஸ்பிரே’ செய்ததால் சினிமா பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், பலரும் பாதிப்புக்கு ஆளாகினர். அதன் பின்னர் அங்கிருந்து மக்கள் தப்ப முயன்றனர்.

அந்த மர்ம நபர்களும் மக்களோடு மக்களாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதேபோல் யோர்க்கில் உள்ள வாகன் சினிமா வளாகத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது அந்த தியேட்டரில் 200 பேர் அமர்ந்து இருந்தனர். ஸ்ப்ரே காரணமாக பார்வையாளர்களில் சிலருக்கு இருமல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் பாதிக்கப்பட்ட சிலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வாரத்தில் மட்டும் பீல் மற்றும் டொராண்டோவில் மட்டும் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. வெறுப்பு குற்றங்களின் பின்னணியில் இதுபோன்ற ரசாயன ஸ்பிரே தெளிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

The post கனடாவில் இந்தி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டருக்குள் ரசாயன ‘ஸ்பிரே’ தெளிப்பு: பார்வையாளர்களுக்கு மூச்சுத்திணறல் appeared first on Dinakaran.

Tags : Canada ,Toronto ,Canada.… ,
× RELATED கனடா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி