×

பைரவருக்கு ஏன் நாய் வாகனம்

குரோதன பைரவர்

குரோதர் என்பதற்கு மனதிற்குள் கோபத்தை மறைத்து வைத்தவன் என்பது பொருள். குரோதன பைரவர் கருப்பு வண்ணத்தினர். சங்கு, சக்கரம், பான பாத்திரம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி வைஷ்ணவியுடன் கருட வாகனத்தில் தென்மேற்குத் திக்கில் வீற்றிருக்கின்றார்.

பீஷ்ண பைரவர்

பீஷ்ணன் என்பதற்கு அச்சமற்றவன் என்பது பொருள். அழிவற்றவன் என்பதும் பொருளாகும். தான் அழிவற்றவனாக இருப்பதைப் போலவே பக்தர்களுக்கும் அழிவற்ற செல்வங்களை வழங்குபவராக பீஷ்ண பைரவர் விளங்குகிறார். பீஷ்ண பைரவர் சிவப்பு நிறத்தினர். சூலம், உலக்கை, கத்தி கபாலம் தந்தி பூத வேதாளங்கள் சூழ பைரவியான சாமுண்டியுடன் சிங்க வாகனத்தில் வடதிசையில் வீற்றிருக்கின்றார்.

சம்ஹார பைரவர்

எட்டாவதான பைரவர் சம்ஹார பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஹரம் என்றால் அழித்தல் சம்ஹாரம் என்பது மேலான அறிவு அல்லது ஆக்கத்திற்கான அறிவு என்று பொருளைத் தருகின்றது. அசுரர்களை சங்கரித்து அவர்களுக்கு அச்சமும் அருளும் தருவதால் பைரவர்கள் சங்கார மூர்த்திகள் எனப்படுகின்றனர். சம்ஹார பைரவர் வெண்மையான நிறம் கொண்டவர். சூலம், டமருகம், சங்கு, சக்கரம், கதை, கத்தி, கபாலம், குறுவாள், பாசம், அங்குசம் என்னும் பத்து ஆயுதங்களை பத்து கரங்களில் ஏந்தியுள்ளார். சண்டிகா தேவியுடன் நாய்மீது வடகிழக்கில் வீற்றிருக்கின்றார்.

காசி நகரத்து அஷ்ட பைரவர்கள்

காசியில் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர். அனுமன் காட்டில் ருரு பைரவரும்; துர்கா மந்திரில் சண்ட பைரவரும்; விருத்த காளேஸ்வரர் ஆலயத்திலுள்ள அமிர்த குண்டத்திற்கு முன்புறம் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவர் எனும் பெயரில் குரோதன பைரவரும் தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும்; திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவிற்குப் பக்கத்தில்) சங்கார பைரவரும் எழுந்தருளியுள்ளனர். எட்டாவதான பீஷண பைரவர் காசிபுராவில் இருக்கின்றார். இவரைப் பூத பைரவர் என்று அழைக்கின்றனர். இவர்களைச் சென்று தொழுவது அஷ்ட பைரவ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

சீர்காழி அஷ்ட பைரவர்

சீர்காழியில் தெற்குப் பிராகாரத்தில் வலம்புரி மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இது யோக ஸ்தானம் என்றழைக்கப்படும். இதில் எட்டு பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவர்கள் முறையே 1.சுதந்திரர், 2.சுயேச்சர், 3.லோகர், 4.காலர், 5.உக்ரர், 6.பிரச்யர், 7.நிர்மாணர், 8.பீஷ்ணர் என்று அழைக்கப்படுகின்றனர்.

குற்றாலம் அஷ்ட பைரவர்

குற்றாலம் சித்திர சபையில் அஷ்ட பைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை கலையழகு மிக்கதாகும்.

பைரவருக்கு ஏன் நாய் வாகனம்

பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால், காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தைச் சுவைப்பது போலவும் அமைத்துள்ளனர். அபூர்வமாகச் சில தலங்களில் நான்கு நாய்களுடனும் பைரவர் அமைக்கப்பட்டுள்ளார். இராமகிரி என்னும் தலத்தில் அன்பர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு பைரவர் சந்நதியில் நாய் உருவத்தைச் செய்து வைத்துள்ளனர்.

இதனால், இங்கு நிறைய நாய் சிலைகள் இருக்கின்றன. பிள்ளைப் பேறு வேண்டி இக்கோயிலை வலம் வரும் பெண்கள் இதிலொரு நாய் வடிவத்தை மடியில் கட்டிக் கொண்டு வலம் வந்த பினி அதை அங்கேயே வைத்துவிட்டு வருகின்றனர். மல்லாரி சிவர் என்னும் பைரவர் ஏழு நாய்கள் சூழ் இருப்பதாக மல்லாரி மகாத்மியம் கூறுகிறது.

பூர்வகாரண ஆகமத்தில் ஆதியில் வேதம் காளை வடிவம் கொண்டிருந்து என்றும் கலியின் கொடுமையால் வலிமையிழந்து இப்போது நாயுருவில் உள்ளது என்றும், அதுவே பைரவருக்கு வாகனமாகியது என்றும் கூறுகிறது. பல்வேறு சமய நூல்களும் வேதமே நாய் வடிவம் கொண்டு பைரவருக்கு வாகனமாக இருக்கிறது என்று குறிக்கின்றன. இதையொட்டி பைரவருக்கு நாய் கொடியாகவும் உள்ளது. ஸ்ரீருத்ரத்தில் இறைவன் நாயாகவும், நாயின் தலைவனாகவும் கூறப்படுவது இங்கே எண்ணத்தக்கதாகும். பைரவரின் நாய்க்கு ‘‘சாரமேயன்’’ என்பது பெயராகும்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி

The post பைரவருக்கு ஏன் நாய் வாகனம் appeared first on Dinakaran.

Tags : Bhairav ,Krudhana Bhairava ,Kruthar ,Bhairava ,
× RELATED ஐப்பசி பரணியில் பைரவருக்கு அன்னப்படையல்