×

பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு காஞ்சி கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதுகுறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சென்று, பள்ளிகள் தூய்மையாக இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

மேலும் நாளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி செல்வதை உறுதிப்படுத்தவேண்டும். பள்ளி கட்டிடங்கள், மேற்கூரைகள் பாதிப்படையாமல் இருக்கிறதா? பள்ளி வளாகத்திற்குள் விஷ பூச்சிகள், பாம்பு போன்ற விஷஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதா? எனவும் ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால் அவற்றை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவேண்டும். வகுப்பறைகளை தூய்மைப்படுத்தவேண்டும். மதிய உணவு மற்றும் காலை உணவு தயாரிக்க பயன்படும் உணவு பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்து நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். வரும் 11.12.2023 திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு காஞ்சி கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kanji Collector ,Kanchipuram ,Tamil Nadu ,Northeast ,Monsoon ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...