×

பெருவழிப்பாதையும் ஐயப்ப தரிசனமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஐயப்பனைக் காண ஐயப்பன் சென்ற வழிப் பாதையில், ஒரு மண்டலம் விரதமிருந்து நாமும் செல்வதே ஐயப்பனின் பாதக் கமலங்களை சரணடைவதற்கான வழியாகும். இந்த பெருவழிப் பாதையின் தூரம் 55 கி.மீ ஆகும். இப்பாதையினை கடந்து பதினெட்டு படிகளை அடைந்து ஐயப்பனை தரிசனம் செய்வதே ஏகாந்த நிலை எனச் சொன்னால் அது மிகையில்லை.

பதினெட்டு படிகளின் தத்துவமானது 1. காமம், 2. கோபம், 3. குரோதம், 4. லோபம், 5. மூர்க்கம், 6. மாச்சர்யம், 7. வீண்பெருமை, 8. அலங்காரம், 9. பிறரை இழிவுபடுத்துதல், 10. பொறாமை, 11. இல்லப்பற்று, 12. புத்திரபாசம், 13. பணத்தின் மீது ஆசை, 14. நாம் எடுத்த பிறவியால் தொடரும் வினை, 15. பழக்கத்தால் வருகின்ற தீவினைகள், 16. நாம் செய்கின்ற செயல்களால் வரும் வினை, 17. மனம், 18. புத்தி போன்ற வற்றிலிருந்து விலகி அய்யனின் பாதக்கமலங்களை சரணடைவதே ஐய்யப்ப தரிசனத்தில் உணரும் தத்துவமாகும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு குணங்களை விட்டொழித்து விரதமிருந்து பழக்கப்படுத்துவதே விரதத்தின் அடிப்படையாகும்.

எருமேலி

எருமேலி தர்ம சாஸ்தா கோயிலில், ஐயப்பன் தர்ம சாஸ்தா காட்டில் வேட்டைக்கு செல்வதற்காகவில் அம்புடன் தரிசனம் தருகிறார். இங்கு வரும் கன்னி அய்யப்ப சாமிகள். பேட்டை துள்ளலைத் தொடங்குகின்றனர். ஐயப்பன் மகிஷியை கொன்றதால்தான் எருமைகொல்லி என்ற பெயர் வந்தது இப்பொழுது எருமேலி என்று அழைக்கப்படுகிறது. மகிஷி என்பதற்கு எருமைத் தலை கொண்ட அரக்கி என்று பொருள். மகிஷியை வதம் செய்து அந்த அரக்கியின் மீது நர்த்தனம் தாண்டவம் ஆடுகிறார். அவரைப் போலவே நம்மையும் பாவித்துக் கொண்டு உடல் முழுவதும் வண்ணங்களை பூசிக்கொண்டு இலை, தழைகளை கட்டிக் கொண்டு ‘திந்தகத்தோம்’ ‘திந்தகத்தோம்’ என கோஷமிட்டு ஆடிப்பாடுகின்றனர், ஐய்யப்ப சாமிகள். பிறகு, தர்ம சாஸ்தாவின் கோயிலின் அருகிலேயே ஐய்யப்பனின் தோழரான வாபரின் பள்ளி வாசலுக்குச் சென்று வணங்கி தங்களின் பயணத்தை தொடங்கலாம்.

பேரூர்தோடு

எருமேலியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் கிழக்கே பேரூர்தோடு இருக்கிறது. பக்கதர்கள் ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டு மிகவும் புத்துணர்வுடன் பயணத்தை தொடங்கலாம். இதற்கு அடுத்தாற்போல் வரும் தலம் காளைகட்டி இடமாகும்.

காளைகட்டி

மகிஷியை வதம் செய்த மணிகண்டனை ஆசீர்வதிப்பதற்காக சிவபெருமான் தனது வாகனமான காளையை கட்டிய இடமாக புராணங்கள் சொல்வதால் இவ்விடம் காளைகட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த காளை கட்டி பேரூர்தோடு 9 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கே சிவாலயம் உள்ளது. இதில் சிவபெருமானை வழிபட்டு பயணத்தை தொடரலாம்.

அழுதாநதி

மணிகண்ட சுவாமி மகிஷியை வதம் செய்து அழுதையின் நதிக்கரையில் தனது அம்பின் மூலமாக கிடத்தினார் என புராணங்கள் சொல்கிறது. இவ்விடம் இயற்கை அழகும் பெரிய மரங்களும் தூய்மையாக ஓடிவரும் அழுதாநதியும் மிக அழகாக இருக்கும். மகிஷி தன் குற்றத்தை உணர்ந்து இங்கே அழுததால் இந்த நதியானது அழுதாநதி என்று அழைக்கப்படுகிறது.

கல்லிடும் குன்று

பக்தர்கள் அழுதாநதியில் நீராடி அந்த ஆற்றிலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்து வந்து அழுதைமேடு என்ற கல்லிடும் குன்று எனும் இடத்தில் அதை போட்டுச் செல்ல வேண்டும். மகிஷியின் பூதஉடலை மணிகண்டன் புதைத்து ஒரு கல்லை வைத்துச் சென்றதாக ஐதீகம் உள்ளது. அதன்படியே பக்தர்கள் அனைவரும் ஆற்றிலிருந்து எடுத்த கல்லை இங்கு வைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செய்து மகிஷிக்கு பாவ விமோசனமும் தரிசனமும் கிடைத்தது போல எங்களுக்கும் ஐயனின் தரிசனமும் விமோச்சனமும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர்.

இஞ்சிப்பாறை கோட்டை

அழுதை மலையின் உச்சியில் இஞ்சிப்பாறை ேகாட்டை உள்ளது. இங்கு ஐயப்பன் தேவன் வியாக்ரபாதன் என்ற நாமத்தில் வரும் பக்தர்களை எல்லாம் ஆசீர்வதிக்கிறார். மனதில் நற்சிந்தனைகள் எழ வேண்டும். எப்பொழுதும் உன்னை மனத்திற்குள் ஜெபிக்க வேண்டும் என்ற பக்கதர்களுக்கு ஆசி வழங்குகிறார். இங்கு வனதேவதையாக மாரியம்மனும் அருள் செய்கிறாள். இதற்கு பின் கரியிலந்தோடை சென்றடையலாம். இங்கு இளைப்பாறி வழிபட்டு அடுத்த பாதைக்கு பயணத்தை தொடங்குவதற்கு பக்தர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம்.

கரிமலை

கரியிலந்தோடு என்பது கரிமலையின் அடிவாரம். கரி என்பது யானை என்று பொருள். யானைகள் நிறைந்த கடினமான மலை என்று பொருள். இந்த மலையின் மண் கருப்பாக இருக்கும். ஆகவே இதன் உண்மையான பெயர் கருமலை ஆகும். கரிமலை ஏற்றம் கடினமானதாக இருக்கும். இந்த ஏற்றத்தை கடப்பதற்கு நாம் இருக்கும் விரதமே நமக்கு துணை நிற்கும். இந்த மலையின் உச்சியில் கரிமலைநாதர் தரிசனம் செய்யலாம். இங்கு உள்ள சுனையில் சுரக்கும் நீர் ஐய்யப்பனின் வில் அம்பினால் உண்டாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த பாதையைக் கடப்பது மிகவும் கடினமானது. மிகவும் ரம்மியமான அழகுடையாதாக உள்ளது. மேலும், முலிகை பல உள்ளதால் வாசனையும் நம்மை ஈர்க்கக்கூடியாக இருக்கும். முலிகையின் காற்று நம் உடலில் உள்ள பல நோய்களை குணப்
படுத்துவதாக உள்ளது.

பெரியானை வட்டம்

கரிமலை ஏற்றம் இறக்கத்தை முடித்து வரும் பகுதியை பெரியானை வட்டம் எனச் சொல்லப்படுகிறது. மலையின் மீது யானைகள் யாவும் ஏற முடியாததால் இங்கு ஏராளமான யானைகள் உலாவுவதால் இதனை பெரியானை வட்டம் என்கின்றனர். இதனை கடந்தால் சிறியானை வட்டம் வந்து பம்பா நதியை அடையலாம்.

பம்பா நதி

கங்கைக்கு இணையான நதியாகச் சொல்லப்படுகிறது. இந்த நதியில் நீராடுபவர்களுக்கு பாவம் தொலையும் என்ற நம்பிக்கையும். இங்கே கங்கையை போல பிதுர் தர்ப்பணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் செய்து கொள்ளலாம். இந்த நதியின் கரையிலேதான் மணிகண்டன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் புகழ் பாடுகின்றன. இங்கு பம்பா விளக்கு ஏற்றி ஐய்யப்பனை நினைத்து மனமுருக வேண்டினால் அனைத்தும் கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐயப்பனை தரிசித்த பலர் இங்கு வந்து அன்னதானம் செய்கின்றனர். ஒவ்வொரு பக்தனுக்குள்ளும் ஐயப்பன் குடிகொண்டு இருக்கிறான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் பலர் பக்தர்களுக்கு சேவை செய்கின்றனர். இங்கு இருந்துதான் சிறுவழிப் பாதை தொடங்குகிறது.

பம்பா கணபதி

பம்பை ஆற்றில் நீராடி பம்பா கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து தடைகள் எல்லாம் தகர்த்தெறிய வேண்டும் என வேண்டுதல்களோடு பயணம் தொடங்குகிறது. இங்கு ராமர், அனுமன், அம்மன் சந்நதிகளில் வழிபட்டு பயணத்தை தொடங்கலாம்.

நீலிமலை

கரிமலை போன்று இந்த நீலிமலையும் கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும், ஐயப்பனை காண வேண்டும் என்ற ஆவலில் இந்த கடினம்கூட தவிடு பொடியாகிவிடும். இந்த மலையில் மாதங்க மகரிஷி புத்திரி நீலியுடன் சிவனை நோக்கி தவம் செய்ததால் இந்த மலை நீலிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைப் பாதை தொடங்கும் இடத்தில் இரண்டு பாதைகள் உள்ளன.

வலது பக்கம் செல்லும் பாதை சுப்ரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது. யானை, நான்கு கால் பிராணிகள் யாவும் இந்த பாதையின் வழியே மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. நீலிமலை ஏற்றத்தின் மேல் அப்பாச்சி மேடும், இப்பாச்சி குழியும் உள்ளது. இங்கு பச்சரிசி மாவு உருண்டைகளை வீசி எறிவார்கள. இந்த பச்சரிசி மாவு உருண்டைகள் வனதேவதையை திருப்திப்படுத்துவதற்காக எறியப்பட்டாலும். இந்த மலைகளில் உள்ள பறவைகள், சின்னச்சின்ன உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இவற்றை தாண்டி நாம் சபரி பீடத்தை அடையலாம்.

சரங்குத்தி

சபரிபீடத்தை அடுத்து சந்நிதானம் செல்லும் பாதை இரண்டாக பிரிந்து இடது பக்கம் செல்லும் பாதை யானைப் பாதை என்றும் வலது பக்கம் செல்லும் பாதை சரங்குத்தி என்றும் பிரிகின்றது. சரங்குத்தியில் கன்னிசாமிகள் மிக நேர்த்தியாக வழிபட்டு செல்கின்றனர். மாளிகை புரத்து அம்மனுக்கு இங்கு கன்னிசாமி எப்பொழுது வரவில்லையோ அப்பொழுது உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என சத்தியம் செய்திருந்தாராம்.

சந்நிதானம்

சந்நிதானம் நெருங்குவதற்கு முன்பு நாம் பதினெட்டுப் படிகளைத் தாண்ட வேண்டும். பதினெட்டு படிகளும் நமது கர்மவினைகளையும், நாம் விடவேண்டிய 18 வஸ்துகளையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. இவற்றை விட்டொழித்தால் ஐயப்பனின் பாதத்தில் சரணாகதி அடையலாம் என்பது தத்துவம். கருப்பண்ண சுவாமி, பெரிய கடுத்த சுவாமியின் அருள்பெற்று சிதறு தேங்காய் சமர்பணம் செய்து 18 படிகளை கடந்து பக்தர்களுக்காக தவத்தில் உள்ள அய்யனை நோக்கி பயணிக்கிறோம்.

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் ‘தத்வமஸி’ என்ற வார்த்தையின் மூலம் அத்வைதத்தை நமக்கு போதிக்கிறான். நீ எதை தேடுகிறாயோ; அதுவே நீயாக உள்ளாய் என்று போதிக்கிறான் ஐயப்பன். இப்படி பல தூரம் கடந்து அய்யனை தரிசிக்கின்ற பொழுது கடந்துவந்த பாதை அனைத்தும் இன்பமாய் நம்மை உணரவைக்கும்.

சபரி பீடம்

சபரி அன்னை இந்த மலையில் மிகுந்த தவம் செய்து வந்த மூதாட்டி ஆவாள். அவள் ராமனின் மீது மிகுந்த பக்தி கொண்டவளாக இருந்தாள். ராமபிரானுக்காக பழங்களை கொடுக்க வேண்டும் என வெகுகாலம் நம்பிக்கையுடன் காத்திருந்தாள். நல்ல ருசியான பழங்களை ருசித்து சேர்த்து வைத்திருந்தாள். அந்த பழங்களை உண்ட ஐயப்பன் மூதாட்டியின் அன்பில், பக்தியில் மயங்கினார். அவளுக்கு மோட்சம் கொடுத்தார் ஐயப்பன். அந்த அன்னையின் பெயராலேயே அவ்விடம் சபரிமலை என்றாகி விட்டது. இங்கு அந்த அன்னையை வழிபடுவதன் மூலம் சபரி கிரி வாசன் மகிழ்ச்சியடைவான் என்பதால் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்லலாம்.

பஸ்மக்குளம்

ஐயப்பன் சந்நதியின் பின்புறம் உள்ளது. இங்கு ஐய்யப்ப பக்தர்கள் நீராடி பாவங்களை தொலைத்து செல்கின்றனர்.

மகரஜோதி தரிசனம்

பக்தர்களுக்காக தவம் செய்யும் ஐயப்பன். மகரசங்கராந்தி அன்று திருவாபரணம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றே காந்தமலையில் ஜோதி சொரூபமாக காட்சி அளிக்கிறார் ஐயப்பன். குறிப்பாக, மகரஜோதி அன்று நட்சத்திரக் கூட்டங்கள் வந்து மறைவதை மகரஜோதி தரிசனமாக உணரலாம்.
சுவாமியே சரணம்! சரணம் ஐயப்பா!!

திருவாபரணம் வரும் பொழுது நிகழும் அதிசயம்

ஒவ்வொரு வருடமும் பந்தள அரண்மனையில் இருந்து சபரிமலை சந்நிதானத்திற்கு வரும் பக்தர்களால் ஐயப்பனுக்கு மகரசங்கராந்தி அன்று ஆபரண அலங்காரம் செய்யப்படும். அந்த தருணத்தில் திருவாபரணத்தை பின்தொடர்ந்து கழுகு வரும். சந்நிதானம் அடைந்ததும் மூன்று முறை வட்டமிட்டு பின் சென்றுவிடும். இது எத்தனையோ வருடங்கள் நிகழும் பல அதிசயங்களில் ஒன்று.

ஐயப்ப சாமிகளை பிணி தொடாது

மாலை அணிந்த ஐயப்ப சாமிகள் தினமும் இரண்டு முறை குளித்து தன்னை தன்னுள் உறைந்திருக்கும் ஆத்ம சொருபத்தை வணங்கும் சாமிமார்களுக்கு எந்த பிணியும் தொடாது. இது ஆண்டாண்டு காலம் ஐயப்பனின் அருளாகும். இதை மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் உணர்வார்கள்.

நுரையீரல் தூய்மை பெறும்

மலையேற்றம் கடினம் என்றாலும், நமது சுவாசத்திற்கு அடிப்படை நமது உடலில் உள்ள நுரையீரல். மலையேற்றம் நிகழும் போது காற்று அதிகமாக உள்ளிழுக்கப்பட்டு அதிகமாக வெளியிடப்படும். அவ்வாறு அதிகமான காற்று உள்ளிழுத்து வெளிவருவதால், தூய்மையான ஆக்ஸிஜன் நமது உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேருகிறது.

தொகுப்பு: சிவகணேசன்

The post பெருவழிப்பாதையும் ஐயப்ப தரிசனமும் appeared first on Dinakaran.

Tags : Ayyappa Darshan ,Kumkum Anmikam ,Ayyappan ,
× RELATED ஐயப்பன் கோயிலில் அன்னதானம்