×

“மிக்ஜாம் புயல் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது”: கூடுதல் விலைக்கு விற்ற முகவர்கள் உரிமம் ரத்து.. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புக்குள்ளான சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், அத்தியாவசிய தேவைகளான பால், குடிநீர், உணவு ஆகியவை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறைவான அளவு பால் வந்ததால், அதை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவானது. இதனிடையே, சென்னையில் தற்போது நிலைமை படிப்படியாக சீராகியுள்ளது.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள ஆவின் பாலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மிக்ஜாம் புயல் பாதிப்புக்குள்ளான சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது. வெள்ள பாதிப்பால் ஆவின் பணியாளர்கள் வருவதில் சிரமம் இருந்தது. தற்போது சீராகி உள்ளது. சென்னை முழுவதும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் ஆவின் பால் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இக்கட்டான சூழலிலும் வழக்கத்தை விட நேற்று அதிகமாக பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நேற்று அதிகபட்சமாக 25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பால் வாங்குவதில் பொதுமக்களிடம் இன்று பதற்றம் இல்லை. சோழிங்கநல்லூர், மாதவரம், அம்பத்தூர் பால் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளன. கூடுதல் விலைக்கு ஆவின் பாலை விற்பனை செய்த சில முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

The post “மிக்ஜாம் புயல் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் பால் விநியோகம் சீரானது”: கூடுதல் விலைக்கு விற்ற முகவர்கள் உரிமம் ரத்து.. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mikjam ,Minister ,Mano Thankaraj ,CHENNAI ,MANO TANGARAJ ,STORM ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்